செய்திகள்

ஜெயலலிதா மரணத்துக்கும், கொடநாடு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கிறது: கனிமொழி

Published On 2019-01-25 02:41 GMT   |   Update On 2019-01-25 02:41 GMT
ஜெயலலிதாவின் மரணத்துக்கும் கொடநாடு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார். #kodanad #Kanimozhi #DMK
கோவில்பட்டி :

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் மண்டபத்தில் தி.மு.க. வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

ஏழை-எளிய ஒடுக்கப்பட்ட மக்களும் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இதற்காகத்தான் தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் போராடி வெற்றி கண்டனர். ஆனால் தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுபிரிவினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டதால், இடஒதுக்கீடே வீணாகக்கூடிய நிலை உள்ளது.

தமிழக மாணவர்கள் மருத்துவ கல்வி பயில வேண்டும் என்பதற்காக கலைஞர் கருணாநிதி மாவட்டந்தோறும் அரசு மருத்துவ கல்லூரியை தொடங்கினார். ஆனால் மருத்துவ கல்வி பயில நீட் தேர்வை கட்டாயமாக்கியதால், தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் நமது மாணவர்கள் பயில்வதற்கு பதிலாக, வெளிமாநில மாணவர்கள் பயிலும் அவலநிலை உள்ளது. தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை முற்றிலும் மத்திய அரசு சிதைத்து விட்டது.



ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே கொடநாட்டில் இருந்த ஆவணங்கள், பொருட்களை திருடுவதற்காக கொள்ளை முயற்சி நடந்தது. கொடநாட்டில் நடந்த 5 கொலைகளுக்கும், திருட்டுக்கும், ஜெயலலிதாவின் மரணத்துக்கும் தொடர்பு இருக்கிறது.

இது மக்களிடம் போய் சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக அ.தி.மு.க. அரசு அனைத்து ஊடகங்களையும் மிரட்டி வருகிறது. இதனை நாம் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கு இப்போது இருந்தே பிரசாரத்தை தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். #kodanad #Kanimozhi #DMK
Tags:    

Similar News