செய்திகள்

தமிழகம் முழுவதும் 2-வது நாளாக போராட்டம் - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 300 இடங்களில் மறியல்

Published On 2019-01-23 05:48 GMT   |   Update On 2019-01-23 05:48 GMT
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 300 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். #JactoGeo

சென்னை:

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தமிழகத்தில் 6.5 லட்சம் அரசு ஊழியர்கள், 4.5 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். ஜாக்டோ-ஜியோவின் முதல்நாள் போராட்டத்தில் 6 லட்சம் பேர் பங்கேற்றனர். பள்ளிக் கல்வித்துறையை பொறுத்தவரையில் தொடக்கப்பள்ளிகள் அதிகளவு செயல்படவில்லை.

பல மாவட்டங்களில் 1-ம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும், 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் அதிகளவு பங்கேற்றதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

ஆசிரியர்கள் பணிக்கு வராததால் ஒரு சில பள்ளிகள் மூடப்பட்டன. சில இடங்களில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் இல்லாததால் மாணவர்களே பாடம் நடத்தினார்கள்.

அரசு ஊழியர்கள் வேலைக்கு செல்லாததால் வருவாய்த்துறை, வணிக வரித்துறை, ஊரக வளர்ச்சி துறை, கலெக்டர் அலுவலகம், தாசில்தார், பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

சென்னையிலும் எழிலகம், பனகல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் அரசு துறை அலுவலகங்கள் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடின.

அரசு ஊழியர்கள் போராட்டத்தால் பணிகள் முடங்கின. பள்ளி மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று 2-வது நாளாக அரசு ஊழியர்-ஆசிரியர்கள் போராட்டம் நீடிக்கிறது. தமிழகம் முழுவதும் 300 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து மாவட்டத்திலும் தாலுகா அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு கூடி கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்து அரசு பஸ்களிலும், வேன்களிலும் அழைத்து சென்றனர். பல இடங்களில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் மறியலில் ஈடுபட்டனர்.

சென்னையில் மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு மறியலில் ஈடுபட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் குவிந்தனர்.

சென்ட்ரல், பாரிமுனை, எழும்பூர், கோயம்பேடு போன்ற பகுதிகளின் மையமாக திகழும் இந்த சாலையில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர், ஆசிரியர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.

மறியல் போராட்டத்தையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். காலை 10 மணி முதல் சிறிது சிறிதாக கூடத் தொடங்கிய கூட்டம் பின்னர் அதிகரித்தது. கைதாகி சிறைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு ஊழியர்கள் குவிந்தனர்.

போலீசார் எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமானதால் மாநகராட்சியின் பக்கவாட்டு பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து கைதானார்கள்.

நேற்றை விட இன்று போராட்டம் தீவிரமானது. சென்னையில் உள்ள அனைத்து துறை ஊழியர்களும் இதில் கலந்து கொண்டனர். இன்றைய போராட்டத்தில் அரசு பணிகள் மேலும் பாதிக்கப்பட்டன.

தலைமை செயலகம் தவிர பிற அலுவகங்களில் பணிபுரியக் கூடிய ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வேலைக்கு செல்லவில்லை.

சென்னையில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள், கலெக்டர் அலுவலக ஊழியர்கள் குறைந்த அளவில் வந்திருந்தனர். இதனால் வழக்கமான பணிகள் முடங்கின.

போராட்டம் குவித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசு கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் 300 இடங்களில் இன்று மறியல் நடக்கிறது. போராட்டத்தில் ஈடுபடும் அனைவரும் கைது ஆவார்கள். அரசு எங்களை கைது செய்து சிறையில் அடைப்பது பற்றி கவலைப்படவில்லை. எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை முடிப்பது இல்லை.

நாளை மீண்டும் அனைத்து தாலுகா அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றியங்கள் முன்பாக மறியல் நடைபெறும். நாளை மறுநாள் மாவட்ட தலைநகரங்களில் மறியல் நடக்கும்.

26-ந்தேதி குடியரசு தினத்தன்று சென்னையில் கூடி அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்து அறிவிப்போம். எங்களை அழைத்து அரசு பேசி தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo

Tags:    

Similar News