செய்திகள்

குட்கா வழக்கில் வருமான வரித்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2019-01-22 10:51 GMT   |   Update On 2019-01-22 10:51 GMT
குட்கா முறைகேடு குறித்து தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #GutkhaScam #MaduraiHCBench
மதுரை:

மதுரையைச் சேர்ந்த கதிரேசன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், குட்கா முறைகேடு தொடர்பாக சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது காவல் துறையினர், உயர் அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சியினருக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கின. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட பலரின் விவரங்கள் இருந்தன.

இதுகுறித்து அப்போதைய தலைமை செயலர் ராமமோகனராவ், அப்போதைய டிஜிபி அசோக் குமார் ஆகியோரிடம் வருமானவரித்துறை முதன்மை ஆணையர் ஒரு கடிதம் அளித்தார். அதில், குட்கா முறைகேட்டில் தொடர்புள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்திருந்தார்.

இந்த கடிதத்தை டிஜிபி, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இந்நிலையில் குட்கா முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை கோரி நான் ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தேன். அந்த விசாரணையின் போது, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் தரப்பில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், குட்கா முறைகேட்டில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான எந்த ஆவணமும் அரசு அலுவலகங்களில் இல்லை என கூறியிருந்தார். இதனை ஏற்று எனது வழக்கை லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


இந்த நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அப்போது குட்கா முறைகேட்டில் டி.ஜி.பி. ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வருமான வரித்துறையினர் அளித்த சில ஆவணங்கள் சசிகலா அறையில் கைப்பற்றப்பட்டன. இதனை வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தான் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் அளித்துள்ளார். எனவே அவர் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை தரப்பில் சீலிட்ட உறையில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கு 22-ந் தேதிக்கு (இன்று) நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

அதன்படி இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்த நிலையில் குட்கா முறைகேடு குறித்து தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பிய ஆதாரத்தை சீலிட்ட கவரில் வருகிற 28-ந் தேதி வருமான வரித்துறையினர் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர். #Gutkha #GutkhaScam #MaduraiHCBench
Tags:    

Similar News