செய்திகள்

கிணற்றில் தவறிவிழுந்து தத்தளித்த குட்டி யானை - 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு

Published On 2019-01-21 11:58 GMT   |   Update On 2019-01-21 11:58 GMT
புளியங்குடி அருகே ஒரு தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த யானை குட்டி 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. #tamilnews
புளியங்குடி:

நெல்லை மாவட்டம் புளியங்குடியில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் உள்ள விளை நிலங்கள், தோட்ட பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து விடுகிறது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் புளியங்குடியை சேர்ந்த குருசாமி என்பவருக்கு சொந்தமாக பள்ளமடத்து ஓடை பகுதியில் உள்ள தோட்டத்திற்குள் இன்று காலை 4 வயது மதிக்கத்தக்க ஒரு குட்டி யானை புகுந்தது. அது வழி தெரியாமல் திரிந்த போது அங்குள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தது.

கிணற்றுக்குள் கிடந்த தண்ணீரில் குட்டி யானை தத்தளித்து கொண்டிருந்தது. அதனை அந்த தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் பார்த்தனர். இதுகுறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் மற்றும் புளியங்குடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.



யானையை மீட்க கிணற்றில் ஒரு புறத்தில் தடுப்பு சுவரை உடைத்து எடுத்து, யானை மேலே வருவதற்கு வசதியாக ஜே.சி.பி. மூலம் வழியை ஏற்படுத்தினர். பின்னர் குட்டி யானையை கயிற்றால் கட்டி பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து வெளியே மீட்டு கொண்டு வரப்பட்டது.

சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்பு குட்டி யானை உயிருடன் மீட்கப்பட்டது. பின்பு அந்த குட்டி யானையை வனத்துறையினர் காட்டுப்பகுதியில் விட்டனர். #tamilnews
Tags:    

Similar News