செய்திகள்

வயல் பகுதிகளில் மின்கம்பம் பதிக்க எதிர்ப்பு: சாலையில் மரங்களை போட்டு கிராம மக்கள் மறியல்

Published On 2019-01-14 10:19 GMT   |   Update On 2019-01-14 10:19 GMT
வேதாரண்யம் அடுத்த கத்திரிப்புலத்தில் வயல் பகுதிகளில் மின்கம்பங்களை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேதாரண்யம்:

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி வீசிய கஜா புயலால் பெரும் பாதிப்புக்குள்ளானது.

புயலால் சாய்ந்த மின்கம் பங்களை சீரமைக்கும் பணி நடந்தது. இதில் நகர்ப் புறங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. கிராமப்புறங்களில் மட்டும் இன்னும் 20 சதவீதம் மின் இணைப்பு கொடுக்கப்பட வேண்டியது உள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கத்திரிப்புலத்தில் வயல் பகுதிகளில் மின்கம்பங்களை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கத்தரிப்புலத்தில் வள்ளுவர் சாலை பகுதியில் கஜா புயல் பாதிப்பிற்கு பிறகு தற்போது மின் வினியோகம் அளிப்பதற்கு மின் கம்பங்கள் நடப்படுகின்றன. அவ்வாறு நடப்படும் மின்கம்பங்கள் சாலையோரம் நடாமல் வயல் பகுதிகளில் நடப்பட்டு வருகிறது.

இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக குற்றம் சாட்டினர்.

மேலும் சாலை வழியே மின்கம்பங்களை நட்டு மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் வந்தனர்.

ஆனால் வயல்பகுதிகளில் மட்டுமே மின்கம்பங்கள் நடப்பட்டு வந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கத்தரிப்புலம் -பனையடி குத்தகை சாலையில் , புயலால் சாய்ந்த தென்னை மரங்கள் மற்றும் மரங்களை சாலையின் குறுக்கே போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தபகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து கரியாப்பட்டினம் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபறறி அதிகாரிகளுடன் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் மறியல் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News