செய்திகள்

அடிப்படை வருமானம் வழங்கும் திட்ட கட்டுப்பாடுகள் பாதிப்பை ஏற்படுத்தும் - மத்திய அரசுக்கு ராமதாஸ் யோசனை

Published On 2019-01-11 20:52 GMT   |   Update On 2019-01-11 20:52 GMT
ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் அடிப்படை வருமானம் வழங்கும் திட்டத்திற்கான மத்திய அரசின் சில கட்டுப்பாடுகள் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #CentralGovernment
சென்னை:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியா முழுவதும் உள்ள ஏழைகளுக்கு அடிப்படை வருமானமாக மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம், குறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வழங்கும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இத்திட்டங்கள் தனித்து செயல்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.



ஆனால், இத்திட்டத்திற்கான சில கட்டுப்பாடுகள் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது தான் கவலையளிக்கிறது. அடிப்படை ஊதியத் திட்டத்தைக் காரணம் காட்டி மதிய உணவுத் திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் போன்றவையும் ரத்து செய்யப்படக்கூடும். அவ்வாறு செய்யப்பட்டால் அது ஏழைக் குழந்தைகளின் கல்வியை பாதிப்பதுடன், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் அதிகரிக்கச் செய்யும். எந்த நோக்கத்திற்காக இத்திட்டம் கொண்டுவரப்படுகிறதோ, அதையே இது சிதைத்து விடும் என்பதை அரசு உணர வேண்டும்.

அதேபோல், குறு உழவர்களுக்கு ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தின்படி, விவசாயிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உர மானியம், இலவச மின்சாரம் ஆகியவை நிறுத்தப்படும். விவசாயத்திற்கான இடுபொருள் செலவுகளும், ஆள் கூலியும் அதிகரித்துவிட்ட நிலையில் அரசு சார்பில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உதவிகள் நிறுத்தப்பட்டால் அது பெரும் இழப்பை ஏற்படுத்தும்.

எனவே, ஏழை மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இப்போது வழங்கப்பட்டு வரும் மானியங்கள், சேவைகள் உள்ளிட்ட அனைத்தையும் தொடரச் செய்து, அத்துடன் கூடுதலாக ஏழைகளுக்கு அடிப்படை வருமானம் வழங்கும் திட்டத்தையும், விவசாயிகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். அத்துடன், அடிப்படை ஊதியம் ஆண்களிடம் வழங்கப்படும் போது அதை அவர்கள் ஓரிரு நாட்களில் தவறான வழிகளில் செலவழித்துவிட்டால் குடும்பம் வறுமையில் வாடும் என்பதால், அரசு வழங்கும் அடிப்படை ஊதியம் குடும்பத்தலைவிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Ramadoss #CentralGovernment
Tags:    

Similar News