செய்திகள்

அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பாம்பு-எலி தின்னும் போராட்டம்

Published On 2019-01-09 13:05 GMT   |   Update On 2019-01-09 13:05 GMT
விருத்தாசலத்தில் கரும்பு நிலுவைத் தொகை வழங்கக்கோரி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பாம்பு-எலி தின்னும் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருத்தாசலம்:

மத்திய அரசு அறிவித்த கரும்பு கிரைய தொகையை சித்தூர் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் இருந்து மாவட்ட நிர்வாகம் பெற்று தர வேண்டும், அந்த தொகையை வட்டியுடன் சேர்த்து பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி விருத்தாசலம் பாலக்கரையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சப்கலெக்டர், தாசில்தார் மற்ற அதிகாரிகள், போலீசாரும் யாரும் விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. இதனால் விவசாயிகள் விடிய, விடிய பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கேயே சாப்பிட்டுவிட்டு படுத்து உறங்கினார்கள்.

நேற்று விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் பட்டை நாமம் போட்டுக்கொண்டு காதில் பூ வைத்துக்கொண்டு அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடுத்தகட்டமாக பாம்புக் கறியை தின்னும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.

அதன்படி இன்று 3-வது நாளாக பாம்பு, எலி கறி தின்னும் போராட்டம் நடந்தது. விவசாயி அண்ணாதுரை தலைமை தாங்கினார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, மாநில செயலாளர் சக்திவேல், குமரேசன், ராஜேந்திரன், விஜயன், நாகராஜ், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அவர்கள் வாயில் பாம்பு மற்றும் எலிகளை வைத்து பச்சையாக உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். #tamilnews
Tags:    

Similar News