செய்திகள்

கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவித்திருப்பது பாமகவுக்கு கிடைத்த வெற்றி - ராமதாஸ்

Published On 2019-01-09 03:15 GMT   |   Update On 2019-01-09 03:15 GMT
கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவித்திருப்பது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். #Ramadoss #PMK
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்கள் தொகையும், நிலப்பரப்பும் அதிகம் உள்ள மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரிக்கவேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தை மூன்றாக பிரித்து விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகியவற்றை தலைநகரங்களாக கொண்ட புதிய மாவட்டங்களை உருவாக்க வலியுறுத்தி பா.ம.க. பல போராட்டங்களை நடத்தியுள்ளது. அதை ஏற்கும் வகையில் கள்ளக்குறிச்சியை தலைநகரமாக கொண்ட புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றியாகும்.

நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும். அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை தனியாக பிரித்து திண்டிவனத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. அந்த கோரிக்கையையும் அரசு நிறைவேற்றவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று, இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத்தலைவர் பாரிவேந்தர், கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்ததற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். #Ramadoss #PMK
Tags:    

Similar News