செய்திகள்

சென்னையில் மரணம் அடைந்த 5 ரூபாய் டாக்டருக்கு ராகுல் காந்தி புகழாரம்

Published On 2019-01-06 12:07 IST   |   Update On 2019-01-06 12:07:00 IST
சென்னையில் மரணம் அடைந்த 5 ரூபாய் டாக்டருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புகழாரம் செலுத்தி இருக்கிறார். #RahulGandhi #FiveRupeeDoctor #DrJayachandran

சென்னை:

சென்னை பழைய வண்ணாரபேட்டையை சேர்ந்தவர் டாக்டர் ஜெயச்சந்திரன். ரூ.5 கட்டணத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவசேவை செய்து வந்தவர். இவரை அந்த பகுதி மக்கள் 5 ரூபாய் டாக்டர் என்றே அழைத்து வந்தனர்.

டாக்டர் ஜெயச்சந்திரன் கடந்த மாதம் மரணம் அடைந்தார். இவரைப்பற்றி அறிந்து பிரதமர் மோடி அவருக்கு புகழாரம் செலுத்தினார். அவரது மான் கி பாத் நிகழ்ச்சியிலும் டாக்டர் ஜெயச்சந்திரன் பற்றி குறிப்பிட்டார். ஜெயச்சந்திரனின் மருத்துவ சேவை நாடு முழுவதும் பேசப்படுகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் டாக்டர் ஜெயச்சந்திரனுக்கு புகழாரம் செலுத்தி இருக்கிறார். இதுபற்றி டாக்டர் ஜெயச்சந்திரனின் மனைவி டாக்டர் வேணி ஜெயச்சந்திரனுக்கு அவர் கடிதம் எழுதி இருக்கிறார். காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு கடிதத்தை அனுப்பி அதை டாக்டர் வேணியிடம் நேரில் வழங்கும்படி அறிவுறுத்தினார்.

இதையடுத்து காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று வண்ணாரப்பேட்டையில் பேரணியாக ராகுல் கடிதத்துடன் டாக்டர் ஜெயச்சந்திரன் வீட்டுக்கு சென்று அவரது மனைவியிடம் அந்த கடிதத்தை வழங்கினார்கள்.

தங்கள் கணவரை இழந்து தவிக்கும் இந்த நேரத்தில் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஏராளமான இந்தியர்கள் கடனிலும், சரியான மருத்துவ வசதி கிடைக்காமலும் தத்தளிக்கும் நேரத்தில் அவரது பணி நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்திருந்தது.

மருத்துவ வசதி இல்லாதவர்களுக்காக அவர் அர்ப்பணிப்புடன் செய்த சேவையால் உண்மையிலேயே மக்கள் டாக்டராக விளங்கினார். அவரது இழப்பு நீண்ட நாட்கள் நாட்டுமக்களால் நினைத்து பார்க்கப்படும். அவரது சேவை சுயநல மற்று உழைக்க பலருக்கு தூண்டுதலாக இருக்கும். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணமும் பிரார்த்தனையும் உங்கள் குடும்பத்துடன் இருக்கும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் சென்ற இந்த பேரணியில் முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், சிரஞ்சீவி, எர்னஸ்ட்பால் உள்பட பலர் கலந்துகொண்டனர். #RahulGandhi  #FiveRupeeDoctor #DrJayachandran

Tags:    

Similar News