செய்திகள்

சபரிமலை பிரச்சினை- வன்முறையாளர்களை பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருமாவளவன் வலியுறுத்தல்

Published On 2019-01-04 08:37 GMT   |   Update On 2019-01-04 08:37 GMT
சபரிமலை பிரச்சினையை முன்வைத்து தமிழ்நாட்டில் வன்முறையில் ஈடுபடுவோரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். #SabarimalaProtest #Thirumavalavan
சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேரள முதல்வர் பினராயி விஜயனை சாதியின் பெயரால் இழிவு செய்து சனாதனவாதிகள் அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். சாதிவெறியும் மதவெறியும் கூட்டாளிகள் தான் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. அது இந்த பிரச்சனையிலும் மெய்யாகியுள்ளது.

சபரிமலையில் வழிபட அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாகும். அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய கடமை கேரள மாநில அரசுக்கு இருக்கிறது.

தற்போது வழிபாடு செய்துள்ள இரண்டு பெண்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளோ அல்லது கேரள அரசின் தூதுவர்களோ அல்ல. அவர்களும் பக்தர்கள் தான். அவர்கள் வழிபடச் சென்றபோது ஆண் பக்தர்கள் உறுதுணையாக இருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால், இந்தப் பிரச்சினையை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சனாதன அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றனர்.

கேரள மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார். அவர் இப்போது மாநில அரசிடம் அறிக்கை கேட்டிருப்பதாகத் தெரிகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தவிடாமல் தடுக்கும் சனாதன சக்திகள் யார் என்பதையும் அந்த சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்பதையும் அவர் மத்திய அரசிடம் எடுத்துக் கூறுவார் என்று நம்புகிறோம்.

சபரிமலை பிரச்சினையை முன்வைத்து தமிழ்நாட்டில் கல்வீச்சிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக் கம்பங்களை வெட்டுவதிலும் சனாதனவாதிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்களைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #SabarimalaProtest #Thirumavalavan
Tags:    

Similar News