சோழவரம் ஏரியில் ரவுடி வெட்டிகொலை- மர்ம கும்பல் தாக்குதல்
செங்குன்றம்:
வியாசர்பாடி, பி.வி. காலனி, கரிமேடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் திவாகர் (வயது 24) ரவுடி. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
நேற்று மாலை திவாகர் நண்பர்களுடன் வெளியே சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று சோழவரம் ஏரியில் திவாகர், வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலை, கழுத்து, மார்பு பகுதியில் பலத்த வெட்டு காயங்கள் காணப்பட்டன. மர்ம நபர்கள் அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்து இருப்பது தெரிந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஏரிக்கு மீன் பிடிக்க வந்தவர்கள் சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து திவாகரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
நேற்று மாலை வாலிபர்கள் சிலர் ஏரிக்கரையில் மது அருந்திவிட்டு காற்றாடி விட்டு கொண்டிருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து உள்ளனர்.
எனவே திவாகருடன் வந்த நண்பர்கள் அவரை தீர்த்துக்கட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கடந்த ஆண்டு வியாசர்பாடியில் நடந்த சீனிவாசன் என்பவரது கொலையில் திவாகர் சம்பந்தப்பட்டு இருந்தார்.
எனவே அவரால் பாதிக்கப்பட்ட யாரேனும் கொலையை அரங்கேற்றி இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
இது தொடர்பாக வியாசர்பாடியை சேர்ந்த 7 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது. ஏரிக்குள் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.