செய்திகள்
அறந்தாங்கி அருகே வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து நகை கொள்ளை
அறந்தாங்கி அருகே வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து பீரோவில் இருந்த 11 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே உள்ள வீரமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேஷ் (45). இவரது மனைவி கலா. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணேஷ் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். கலா தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கலா தனது குழந்கைளுடன் வீட்டை பூட்டி விட்டு அதே பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று இரவு வீடு திரும்பினார். வீட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது பீரோ திறந்து கிடந்தது. அதை சோதனை செய்த போது அதில் இருந்த 11 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.