செய்திகள்

கனடாவில் வேலை வாங்கி தருவதாக ரூ. 15 லட்சம் மோசடி - வேலூர் வாலிபர் கைது

Published On 2018-12-27 18:10 GMT   |   Update On 2018-12-27 18:10 GMT
கனடாவில் வேலை வாங்கி தருவதாக ரூ. 15 லட்சம் மோசடி செய்த வேலூர் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோவை:

கோவை போத்தனூரை சேர்ந்தவர் ஸ்டீபன் (30). ஆர்.எஸ். புரத்தில் வணிக வளாகத்தில் உள்ள கண்ணாடி கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 6 மாதத்திற்கு முன் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கலசம்பட்டியை சேர்ந்த உமா மகேஸ்வரன் (31) என்பவர் கடைக்கு வந்தார். அவர் ஸ்டீபனிடம் அறிமுகம் ஆனார். அப்போது உமா மகேஸ்வரன் தான் ஏற்கனவே கனடாவில் வேலை பார்த்ததாகவும் அங்கு நிறைய பணம் சம்பாதித்தாகவும் தற்போது கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருவதாகவும் கூறினார்.

நீங்களும் கனடா சென்றால் நிறைய சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி உள்ளார். மேலும் தான் ஏற்கனவே கனடாவில் வேலை பார்ததற்கான போலி ஆவணங்களையும் காண்பித்து உள்ளார்.

இதனை ஸ்டீபன் உண்மை என நம்பி உள்ளார். கனடா செல்ல வேண்டுமானால் பாஸ்போர்ட்டு உள்ளிட்டவைகளுக்கு ஏராளமான பணம் செலவாகுமே என ஸ்டீபன் கேட்டு உள்ளார்.

அதற்கு உமா மகேஸ்வரன் ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் கொடுத்தால் போதும். கனடாவுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்து உள்ளார். அதன் படி அவர் ரூ. 1 லட்சத்து 75 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்டீபன் தனது நண்பர்கள் பிரகாஷ், சவுந்தர் ராஜ், பாலாஜி, ஜெகதீஷ் உள்ளிட்ட 5 பேரிடம் தெரிவித்து உள்ளார். அவர்களும் கனடாவில் வேலை கிடைக்கும் என நம்பி பணம் கொடுத்துள்ளனர்.

அதன்படி ரூ. 15 லட்சம் வரை உமா மகேஸ்வரன் வாங்கி உள்ளார். அதன் பின்னர் வேலை வாங்கி கொடுக்கவில்லை. அப்போது தான் ஸ்டீபன் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார்.

இது குறித்து கோவை குற்றப்பிரிவு துணை கமி‌ஷனர் பெருமாளிடம் புகார் அளித்தார். அவர் விசாரணை நடத்தும் படி உத்தரவிட்டார். அதன்படி உதவி கமி‌ஷனர் சோம சேகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபட்ட உமா மகேஸ்வரனை கைது செய்தனர். #tamilnews
Tags:    

Similar News