செய்திகள்

பொன்.மாணிக்கவேல் மீது குற்றச்சாட்டு- பின்புலத்தில் யாரோ இருப்பதாக கூறுகிறார் எச்.ராஜா

Published On 2018-12-22 10:40 GMT   |   Update On 2018-12-22 10:40 GMT
பொன். மாணிக்கவேல் மீது புகார் அளித்த காவல் துறை அதிகாரிகளின் பின்புலத்தில் யாரோ இருக்கிறார்கள் என்று பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். #BJP #HRaja #PonManickavel
கோவை:

பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கோவையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ராணுவ வீரர்கள் 40 ஆண்டுகளாக போராடி வந்த ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை மோடி தலைமையிலான மத்திய அரசு தீர்த்து வைத்தது. நல்ல அரசாங்கம் என்று சொன்னால் நாட்டின் மரியாதை உலகளவில் உயர்ந்து இருக்க வேண்டும். தற்போது இந்தியாவுக்கு உலகளவில் மரியாதை உள்ளது. உலகளவில் இந்தியாவின் ஜிடிபி 7.3 சதவீதமாக வளர்ந்து வருகிறது.

சிலை கடத்தல் எப்படி நடக்கிறது என்றால், கைவிடப்பட்ட கோவில்களில் சிலை கடத்தல் நடைபெறுவதை ஆதாரங்களுடன் நான் சொல்லிவருகிறேன். செவி வழி செய்தியை சொல்பவன் நான் அல்ல. 50 ஆண்டுகள் திராவிட ஆட்சியில் இவ்வளவு சிலைகள் கடத்தப்பட்டது அவமானம்.

கோவை மாதம்பட்டியில் ஒரு கோவிலை புனரமைக்க 2015-ம் ஆண்டில் இருந்தே அப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை கோவில்களை கைவிடுவதே சிலைகளை திருடுவதற்குத்தான். அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி ஊரில் உள்ள நடராஜர், சிவகாமி சிலைகள் நியூயார்க்கில் உள்ளது. அங்கு எப்படி சென்றது?

சிவன் கோவிலில் உள்ள 10 சிலைகள், பெருமாள் கோவிலில் உள்ள 8 சிலைகள் 45 ஆண்டுகளாக பூஜை செய்யாமல் பூட்டப்பட்ட நிலையில் 2007-ல் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களை திறந்து புகைப்படம் எடுத்துள்ளனர். அதற்கு அடுத்து ஒரு வாரத்தில் கொள்ளை நடந்து 18 சிலைகள் திருடப்பட்டது. அது தான் நியூயார்க் போய் உள்ளது.

அப்போது தான் ஜெர்மனியில் சுபாஷ் கபூர், இங்கு தீனதயாளன், சஞ்சீவி, அசோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலில் சிலைகளை போலியாக செய்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரி கஜேந்திரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தினால் மற்ற துறையும் ஊழல் நிறைந்தது என்பது தானே அர்த்தம்.

கவிதா, திருமகள் ஆகியோர் சிலை திருடர்கள். ஆதாரங்களோடு நடவடிக்கை எடுத்ததால் தான் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொன். மாணிக்கவேல் ஒன்றரை ஆண்டுகளில் 140 சிலைகளை மீட்டவர். மக்களிடம் கருத்து கணிப்பு வைத்தால் பொன். மாணிக்கவேல் வெற்றி பெறுவார்.


பொன். மாணிக்கவேல் மீது புகார் அளித்த காவல் துறை அதிகாரிகளின் பின்புலத்தில் யாரோ இருக்கிறார்கள். பொன். மாணிக்க வேல் மீது குற்றச்சாட்டு சொல்பவர்கள் அமைச்சர் என்றாலும் அவரின் நேர்மை மக்களிடையே கேள்விக்கு உட்படுத்தப்படும்.

சிலைகளை மீட்பவருக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும். சந்தேகப்பட கூடாது.

இவ்வாறு அவர் கூறினார். #BJP #HRaja #PonManickavel
Tags:    

Similar News