செய்திகள்

மெரினாவில் கடைகளை அகற்ற எதிர்ப்பு: மீனவர்கள் வழக்கு தொடர்ந்தால் விசாரிக்கப்படும் - ஐகோர்ட்

Published On 2018-12-21 10:10 GMT   |   Update On 2018-12-21 10:10 GMT
மெரினா கடற்கரையில் இருந்து கடைகளை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் மீனவர்கள் இது குறித்து வழக்கு தொடர்ந்தால் விசாரிக்கப்படும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #ChennaiHighCourt
சென்னை:

மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை அதிகரித்து தரும்படி மீனவர்கள் நல அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து மெரினா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகள் மற்றும் மீனவர்கள் வியாபாரம் செய்வதற்கான மாற்று இடம் வழங்குவது குறித்து மாநகராட்சி ஆணையர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் வினித் கோத்தாரி, அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு மற்றும் தூய்மை பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மீனவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதால், தூய்மைப்படுத்தும் பணிகள் மட்டும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மீனவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அப்போது, மெரினாவில் கடை நடத்துபவர்கள் சங்கம் சார்பாக முறையிடப்பட்டது. அதில், மெரினாவை ஒழுங்குமுறை படுத்துகிறோம், தூய்மை படுத்துகிறோம் என்றும் எங்களை அப்புறப்படுத்த முயற்சி செய்கின்றனர். அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று முறையிடப்பட்டது. இதேபோன்று, மீனவர்கள் தரப்பில் தங்களை கட்டாயப்படுத்தி எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல் அப்புறப்படுத்த முயற்சிக்கின்றனர் என தெரிவித்தனர்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மெரினா கடற்கரையில் இருந்து கடைகளை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் மீனவர்கள் மற்றும் வணிகர்கள் முறைப்படி மனுதாக்கல் செய்தால், அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினர். விசாரணையை வருகிற ஜனவரி 10-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். #ChennaiHighCourt
Tags:    

Similar News