செய்திகள்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலக திட்டமா?- கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ பதில்

Published On 2018-12-18 05:36 GMT   |   Update On 2018-12-18 05:36 GMT
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலக திட்டமா? என்ற கேள்விக்கு கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ பிரபு பதில் அளித்துள்ளார். #PrabhuMLA #ADMK
கள்ளக்குறிச்சி:

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பிரபு.

இவர் கடந்த பிப்ரவரி மாதம் அ.தி.மு.க.வில் இருந்து விலகி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். இதையடுத்து அவர் அ.ம.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளராக இருந்து வருகிறார். இவர் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை. தொடர்ந்து எம்.எல்.ஏ. ஆக உள்ளார்.

இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலகி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைந்ததை போல், பிரபு எம்.எல்.ஏ. அ.தி.மு.க.வில் இணையப்போவதாக சமூக வலைதளங்களிலும், கட்சியினர் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக பிரபு எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக நான் அ.தி.மு.க.வில் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்.

நான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் உண்மையான விசுவாசியாகவும், தொண்டனாகவும் செயலாற்றுவேன். அணி மாறப்போவதாக வரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்.


அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளராக சசிகலா, துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் எப்போது ஆகிறார்களோ அப்போது தான் அ.தி.மு.க.வும்- அ.ம.மு.க.வும் இணையும்.

ஜெயலலிதாவின் எண்ணம் ஈடேற வேண்டும் என்றால் இந்த ஆட்சியும், கட்சியும் சசிகலாவிடம் வந்தால் தான் அது முடியும். அதுவரை நான் அயராது உழைத்து இந்த இயக்கத்தை வலுப்படுத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார். #PrabhuMLA #ADMK
Tags:    

Similar News