செய்திகள்

மதுரையில் ரகசிய எண்ணை பெற்று ரூ.1¼ லட்சம் மோசடி- போலீசார் விசாரணை

Published On 2018-12-14 14:22 GMT   |   Update On 2018-12-14 14:22 GMT
வங்கி அதிகாரி போல் பேசி ரகசிய எண்ணை பெற்று ரூ.1¼ லட்சம் மோசடி செய்த நபர் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை:

மதுரை சொக்கிக்குளம் எச்.ஏ.கே. ரோட்டைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 55). இவர் அதே பகுதியில் உள்ள அரசுடமை வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார்.

சம்பவத்தன்று இவரிடம் செல்போனில் பேசிய மர்ம நபர் தான் வங்கி அதிகாரி என்றும், உங்களுக்கு குறுந்தகவலில் வந்துள்ள ரகசிய எண்ணை சொல்லுங்கள், சரிபார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

வங்கி அதிகாரி கேட்கிறார் என்ற ஆர்வத்தில் கார்த்திகேயனும் ரகசிய எண்ணை கூறியுள்ளார்.

சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.90 ஆயிரம் எடுக்கப்பட்டிருப்பதாக குறுந்தகவல் வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனே வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, வங்கியில் இருந்து யாரும் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் தனது வங்கி கணக்கை முடக் குமாறு தெரிவித்துள்ளார். ஆனால் வங்கி மேலாளர் அதை செய்யவில்லை என கூறப்படுகிறது.

தொடர்ந்து மறுநாள் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரம் எடுக்கப்பட்டிருப்பதாக மீண்டும் குறுந்தகவல் வந்தது. இதனால் மேலும் அதிர்ச்சிக்குள்ளான கார்த்திகேயன் வங்கியை தொடர்பு கொண்டபோது, அவரது கணக்கை முடக்கம் செய்யவில்லை என தெரியவந்தது.

இது குறித்து அவர் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கணக்கை முடக்காமல் மேலும் மோசடிக்கு வழி வகுத்ததாக வங்கி மேலாளர் மீதும் ரகசிய எண் மூலம் பணத்தை எடுத்த மர்ம நபர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை புதுராமநாதபுரம் ரோட்டில் தனியார் கான்கிரீட் கலவை நிறுவனம் உள்ளது. இங்கு வரவு-செலவு கணக்கை ஆடிட்டர் ஆய்வு செய்த போது அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையைச் சேர்ந்த குமார் என்பவர் ரூ.20 லட்சம் மோசடி செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News