செய்திகள்

ஊர்க்காவல் படையினர் மீண்டும் போராட்டம்? - மெரினாவில் போலீஸ் குவிப்பு

Published On 2018-12-13 11:27 GMT   |   Update On 2018-12-13 11:27 GMT
ஊர்க்காவல் படையினர் இன்று சென்னை கோட்டையை முற்றுகையிடப் போவதாக தகவல் பரவியதையடுத்து மெரினா கடற்கரையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
சென்னை:

தமிழகம் முழுவதும் ஊர்க்காவல் படையினர் ஏராளமானோர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

பாதுகாப்பு பணி இல்லாத நேரங்களில் இவர்கள் சொந்த வேலையை பார்க்க சென்று விடுவார்கள். இவர்கள் போலீசாருக்கு உரிய சீருடையில் பணிபுரிவார்கள். ஆனால் இவர்களுக்கு சம்பளம் போலீசாரை விட குறைவு.

இந்த நிலையில் சமீபத்தில் தமிழகத்தை சேர்ந்த ஊர்க்காவல் படையினர் வட மாநில தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சென்றனர். அங்கு போலீசாருக்கு இணையாக ஊர்க்காவல் படையினருக்கும் சம்பளம் வழங்கப்படுவதை அறிந்தனர்.

இதையடுத்து தமிழகம் திரும்பிய அவர்கள் தங்களுக்கும், போலீசாருக்கு இணையான சம்பளம் வழங்க கோரி கடந்த வாரம் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போராட்டம் நடத்தினார்கள். அன்று மாலை தொடங்கிய போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த நிலையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்க்காவல் படையினர் இன்று சென்னை கோட்டையை முற்றுகையிடப் போவதாக தகவல் பரவியது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் கிளம்பி வருவதாக கூறப்பட்டது.

இதையடுத்து மெரினா கடற்கரையிலும் எழிலகம் எதிரிலும், நேப்பியர் பாலம் அருகிலும், தலைமை செயலகம் முன்பும் இன்று ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

மேலும் எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Tags:    

Similar News