செய்திகள்

ஆரணி அருகே மணல் டிராக்டர் மோதி வாலிபர் படுகாயம்- பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2018-12-03 12:21 GMT   |   Update On 2018-12-03 12:21 GMT
ஆரணி அருகே மணல் திருட்டை தடுக்க கோரி டிராக்டரை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

ஆரணி:

ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தையொட்டி உள்ள செய்யாற்றில் லாரி, டிராக்டர் மற்றும் மாட்டுவண்டுகளில் மணல் கொள்ளை சம்பவம் அதிகளவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் தச்சூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது 21). இவர் இன்று காலை தச்சூர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது மணல் கடத்தி கொண்டு வேகமாக வந்த டிராக்டர் ஏழுமலை மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் டிராக்டரை சிறைபிடித்து ஆரணி தேவிகாபுரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த டி.எஸ்.பி. செந்தில், ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன்ராஜா மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் தச்சூர் பாலாற்றில் தொடர் மணல் கொள்ளை சம்பவம் அதிகம் நடப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே மணல் திருட்டை தடுத்து விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News