செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் நாளை வேலை நிறுத்தம்

Published On 2018-12-03 08:10 GMT   |   Update On 2018-12-03 08:10 GMT
தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். 18,600 அரசு மருத்துவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். #DoctorsStrike
சென்னை:

தமிழகம் முழுவதும் நாளை அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.

அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாவட்ட கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பெருமாள் கூறி இருப்பதாவது:-

கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வின்றி தமிழக அரசு டாக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் தான் அரசு டாக்டர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சருடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. தீபாவளி வரை காத்திருக்குமாறு கூறினார்கள். இருப்பினும் எங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை.

எனவே நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். 18,600 அரசு மருத்துவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். புறநோயாளிகளின் சிகிச்சையை முற்றிலுமாக நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் 7-ந்தேதி வரை கூட்டங்களை நடத்துவது என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. 8-ந்தேதி முதல் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டர்கள் போராட்டம் தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-


தமிழ்நாடு அரசாங்க மருத்துவர்கள் சங்கம் ஊதிய உயர்வு, பணி உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைக்களுக்காக வேலை நிறுத்த போராட்டம் செய்வதாக அறிவித்துள்ளது மிகுந்த கவலை அளிக்கிறது.

முதல்-அமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் அரசு மருத்துவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ இடங்களை காப்பாற்ற வேண்டும்.

நாடு முழுவதும் ஏறத்தாழ 6000 முதல் 10000 மருத்துவ பட்ட மேற்படிப்பு புதிய இடங்களை மத்திய அரசு உருவாக்கி உள்ள நிலையில் தமிழக மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான இடங்களை அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தால் இழந்து விடக்கூடாது என்பதற்காக வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ள அரசு மருத்துவர்களை அழைத்து தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DoctorsStrike
Tags:    

Similar News