செய்திகள்

புயல் நிவாரணத்துக்கு கேரளா ரூ.10 கோடி உதவி- கமல்ஹாசன் நன்றி

Published On 2018-11-29 11:52 IST   |   Update On 2018-11-29 11:52:00 IST
கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.10 கோடி அளித்துள்ள கேரள முதல்- மந்திரி பினராய் விஜயனுக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். #GajaCyclone #KamalHasan #PinarayiVijayan
சென்னை:

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கடிதம் எழுதினார்.

இந்த நிலையில் கஜா புயல் பாதிப்புக்கு கேரள அரசு ரூ.10 கோடி நிதி உதவி வழங்குகிறது.

இது தொடர்பாக முதல்- மந்திரி பினராய் விஜயன் தலைமையில் நடந்த கேரள அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக பினராய் விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டுக்கு கேரளா துணையாக இருக்கும். கஜா புயல் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உதவுவதற்காக கேரள அரசு சார்பில் ஏற்கனவே 14 வாகனங்களில் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைத்து உள்ளோம்.

மேலும் 6 மருத்துவ குழுவினர் மற்றும் கேரள மின்வாரியத்தைச் சேர்ந்த 72 ஊழியர்களும் தமிழக நிவாரண பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தன்னார்வம் கொண்டவர்களும் கஜா புயல் நிவாரண பணிகளுக்காக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு சென்று உள்ளனர். புயல் பாதிப்பில் இருந்து தமிழகம் விரைவில் மீள நாம் அனைத்து உதவிகளையும் செய்வோம்.



இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.10 கோடி அளித்துள்ள கேரள முதல்- மந்திரிக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு கேரள அரசு சார்பாக ரூ.10 கோடி அளித்ததற்காக அந்த மாநில முதல்-மந்திரிக்கு நன்றி. வேண்டுகோள் வைத்த 24 மணி நேரத்துக்குள் துரிதமாக நடவடிக்கை எடுத்த உங்கள் செயல்பாடு மனிதத்தின் வெளிப்பாடு.

இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #KamalHasan #PinarayiVijayan
Tags:    

Similar News