செய்திகள்

மார்ச் இறுதிக்குள் கீழடியில் அருங்காட்சியகம்- அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

Published On 2018-11-28 11:35 GMT   |   Update On 2018-11-28 11:35 GMT
கீழடியில் மார்ச் இறுதிக்குள் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். #MinisterPandiarajan
மதுரை:

மதுரை உலகத்தமிழ் சங்கத்தில், சீனக்கவிஞர் யூ.சி.யின் திருக்குறள் ஆய்வு கருத்தரங்கம் இன்று நடந்தது. இதில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் கலந்து கொண்டார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர். முன்னதாக அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 40 இடங்களில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 4 அருங்காட்சியகங்களை சீரமைக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகளும் நடந்து வருகிறது.

மாவட்டந்தோறும் அருங்காட்சியகம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பத்திரமாக உள்ளன.

முதற்கட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மைசூரில் உள்ளது. தேவைப்படும் நேரத்தில் அதனை தருவதாக உறுதி அளித்துள்ளனர்.

2 மற்றும் 3-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் சென்னையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 4-ம் கட்ட ஆய்வில் கண்டெடுக்கப்பட்டவை கீழடியிலேயே உள்ளன. அங்கு 5-ம் கட்ட பணியும் நடந்து வருகிறது.

மார்ச் இறுதிக்குள் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர், கொற்கை பகுதியில் அகழாய்வு பணிகள் தொடங்குவது குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #MinisterPandiarajan
Tags:    

Similar News