செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கு எதிர்ப்பு- 3 நாட்கள் கடையடைப்பு போராட்டம்

Published On 2018-11-26 12:13 GMT   |   Update On 2018-11-26 12:13 GMT
பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் 3 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக விக்கிரமராஜா கூறியுள்ளார்.
சேலம்:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் சேலம் பிளாஸ்டிக் வியாபாரிகள், தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் பிளாஸ்டிக் தடை பற்றிய ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உள்நாட்டு வணிகத்தை முடக்குவதற்காகவே அடுத்தாண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. இதனால் கடன் வாங்கி தொழில் தொடங்கிய வணிகர்கள் உள்பட ஏராளமானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எந்தெந்த பொருட்களுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை என்பதை அரசு அறிவிக்காததால் வணிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். 2020-ம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படாத நாடாக மாற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதேபோல் தமிழக அரசும் 2020-ம் ஆண்டு வரை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த கால அவகாசம் கொடுக்க வேண்டும். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் 3 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். இதுதொடர்பாக வருகிற 15-ந் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றி அறிவிக்க உள்ளோம்.

இதுதவிர பட்டாசு வெடிப்பதற்கு தடை மற்றும் உணவு பொருட்களில் உள்ள பல்வேறு சட்ட விதிகளை மாற்றக்கோரி வருகிற 19-ந் தேதி டெல்லியில் பேரணி நடத்த உள்ளோம். சேலம் செவ்வாய்பேட்டை மேம்பாலத்தை விரைவில் கட்டக்கோரி கோரிக்கை விடுத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் வணிகர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Tags:    

Similar News