செய்திகள்

மன்னார்குடி அருகே நிவாரண முகாமில் தங்கியிருந்த 85 வயது மூதாட்டி மரணம்

Published On 2018-11-25 09:02 GMT   |   Update On 2018-11-25 09:02 GMT
மன்னார்குடி அருகே நிவாரண முகாமில் தங்கியிருந்த 85 வயது மூதாட்டி மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Gajastorm

மன்னார்குடி:

கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்கள் நிவாரண முகாமில் கடந்த 9 நாட்களாக தங்கி உள்ளனர். இதேபோல் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோமாளபேட்டை கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்கி உள்ளனர். இந்த முகாமில் அதே ஊரை சேர்ந்த ராஜகோபால் மனைவி பக்கிரிஅம்மாள் (வயது85) என்பவரும் தங்கி இருந்தார்.

கூலித் தொழிலாளியான இவரது கூரை வீடு புயலால் இடிந்து விட்டதால் 9 நாட்களாக முகாமில் தங்கி இருந்து வந்தார். இந்நிலையில் தொடர் மழை காரணமாக அவர் 2 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் பக்கிரி அம்மாள் இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென இறந்து விட்டார்.

இதையடுத்து முகாம் பணியை பார்வையிட்டு வரும் அரசு அதிகாரிகளுக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுபற்றி அவரது மகள் மல்லிகா என்பவர் கோட்டூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். #Gajastorm

Tags:    

Similar News