செய்திகள்

புயல் பாதித்த கிராமங்களில் டாக்டர் பணியில் இறங்கிய டாக்டர் தமிழிசை

Published On 2018-11-25 08:29 GMT   |   Update On 2018-11-25 08:29 GMT
கஜா புயல் பாதித்த பகுதிகளில் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மருத்துவ ரீதியான நிவாரணங்களில் ஈடுபட்டு வருகிறார். #GajaCyclone #TamilisaiSoundararajan
சென்னை:

கஜா புயல் பாதித்த பகுதிகளில் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மருத்துவ ரீதியான நிவாரணங்களில் ஈடுபட்டு வருவது மக்களை கவர்ந்துள்ளது.

பாரத் பெட்ரோலிய நிறுவனத்திடம் ரூ.15 லட்சம் மதிப்புள்ள மருந்து பொருட்களை வாங்கி, தனது சொந்த செலவிலும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மருந்துகளை சேகரித்தார். ஒரு நடமாடும் ஆம்புலன்சையும் தயார் செய்து 10 டாக்டர்களை கொண்ட மருத்துவ குழுவுடன் களத்தில் இறங்கி இருக்கிறார்.

3 நாட்களாக அங்கேயே முகாமிட்டு மருத்துவ பணியில் ஈடுபட்டுள்ளார். உட்புற கிராமங்களுக்கும், நிவாரண முகாம்களுக்கும் சென்று மருத்துவ பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கி வருகிறார்.



பேராவூரணி, புதுக்கோட்டையை சுற்றி இருக்கும் கிராமங்களுக்கு சென்று சிகிச்சை அளித்தார். போகும் வழிகளில் இறங்கி சேதங்களை பார்வையிட்டு ஆறுதல் கூறியும், அவர்களுக்கு உடனடி தேவை என்ன என்பதையும் கேட்டு குறித்து கொள்கிறார். மறுநாள் அதில் முடிந்தவற்றை செய்து கொடுக்கிறார். மருத்துவ குழுவினருடன் பா.ஜனதா தொண்டர்களும் செல்கிறார்கள்.

நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் 37 கிராமங்களுக்கு இந்த குழுவினர் சென்று சிகிச்சை அளித்தனர்.

பகல் முழுவதும் புயல் பாதித்த பகுதிகளிலேயே சுற்றிவரும் இந்த குழுவினர் கிராமங்களில் மக்களுடன் மக்களாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள்.

இரவு வரை நிவாரண உதவிகள் வழங்கும் அவர்கள் அந்த பகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளின் வீடுகளிலேயே தங்குகிறார்கள்.

அந்த பகுதியில் உள்ள மக்கள் இரவை தாண்டியும் யாராவது வரமாட்டார்களா ஆறுதலாக இருக்க மாட்டார்களா என்று ஏங்குகிறார்கள். அவர்களுக்கு இப்போது மனரீதியான ஆறுதலும் தேவை. அவர்களுடன் அமர்ந்தாலே வலியை மறந்து ஆறுதல் அடைகிறார்கள்.

முகாம்களில் உள்ளவர்களுக்கு உடல்வலி, சளி, இருமல், காய்ச்சல் உள்ளது. அதற்கு தேவையான மருந்துகளை வழங்கி வருகிறோம்.

மேலும் சத்து மருந்துகள், புரோட்டீன், நாப்கின், டெட்டால் போன்றவற்றையும் வழங்குகிறோம். தொடர்ந்து நிவாரண பணிகளில் தொண்டர்கள் ஈடுபடுவார்கள்.

இந்த மனிதாபிமான உதவிகளைகூட கொச்சைப்படுத்தி சமூக வலைத் தளங்களில் பதிவிடுகிறார்கள். அதைப்பற்றி எனக்கு எந்த கவலையும் கிடையாது. களத்தில் மக்களோடு மக்களாக இருக்கிறேன். அவர்களின் ஆதரவும், செய்யும் நிவாரண பணிகளும் மனதுக்கு திருப்தியாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.  #GajaCyclone #TamilisaiSoundararajan

Tags:    

Similar News