செய்திகள்

தருமபுரியில் ரூ.17 லட்சம் மோசடி செய்த நகை கடை அதிபர்

Published On 2018-11-23 14:14 GMT   |   Update On 2018-11-23 14:14 GMT
தருமபுரியில் வாலிபரிடம் நகை கடை அதிபர் ஒருவர் ரூ.17 லட்சம் கடனுக்கு வாங்கிவிட்டு மனைவியுடன் தலைமறைவாகி விட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தருமபுரி:

தருமபுரி சூடாமணி தெருவைச் சேர்ந்தவர்குமார் (வயது 46). இவரது மனைவி நீலா. கடைவீதி பகுதியில் குமார் சொந்தமாக நகை கடை வைத்து நடத்தி வந்தார்.

இவர் தருமபுரியை அடுத்த பழையதருமபுரி பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் வேலவன் என்பவரிடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நகை கடையில் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய ரூ.17 லட்சம் கடனாக வாங்கினார்.

கடன் வாங்கி 2 மாதங்களில் திருப்பி தருவதாக கூறிய குமார் பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்தார். வேலவன் பலமுறை குமாரிடம் சென்று கேட்டபோது, பணம் தராமல் இழுத்தடித்து வந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ந் தேதி அவரது வீட்டிற்கு சென்று மீண்டும் பணத்தை திருப்பி தருமாறு வேலவன் கேட்டார். அப்போது அவரும், அவரது மனைவியும் வேலவனை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் திருப்பி அனுப்பினர்.

இதுகுறித்து தருமபுரி டவுன் போலீசாரிடம் வேலன் புகார் தெரிவித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக தெரியவந்தது.

இதனால் விரக்தியடைந்த அவர் ரூ.17 லட்சம் பணத்தை குமாரிடம் இருந்து மீட்டு தருமாறு தருமபுரி குற்றவியல் நீதிமன்றத்தில் வேலவன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி ஜீவாபாண்டியன் விசாரித்து குமார் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்க உத்தரவு விட்டார். நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் தருமபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் வேலவனிடம் பணம் மோசடி செய்த குமார் மற்றும் அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்தார்.

மேலும் கணவன்- மனைவி 2 பேரையும் விசாரிக்க போலீஸ் நிலையத்திற்கு அவர்களை அழைத்து வர குமார் வீட்டிற்கு போலீசார் சென்றனர்.

அங்கு குமாரும், அவரது மனைவி நீலாவும் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டது தெரியவந்தது. பணம் மோசடி செய்து விட்டு தலைமறைவாக உள்ள கணவன்- மனைவி 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News