செய்திகள்

தானே புயலைவிட 10 மடங்கு அதிகம் - டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்பு

Published On 2018-11-21 06:53 GMT   |   Update On 2018-11-21 07:11 GMT
தானே புயல் பாதிப்பைவிட கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் 10 மடங்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. #Gajastorm #Thanestorm #storm

சென்னை:

கஜா புயல் நடத்திய கோரத் தாண்டவத்தால் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களும் உருக்குலைந்து விட்டன.

மக்களின் அனைத்து விதமான வாழ்வாதாரங்களையும் கஜா புயல் கபளீ கரம் செய்து விட்டதால் ஏழை - எளியவர்கள் நடுத்தர மக்கள் அடுத்து என்ன செய்வது, எப்படி சமாளிப்பது என்பது புரியாமல் தவித்தபடி உள்ளனர்.

புயல் தாக்கி இன்றுடன் 6-வது நாளை எட்டியுள்ள நிலையில் 90 சதவீத கிராமங்கள் இன்னமும் முழுமையான இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. மின்சாரம், குடிநீர், உணவுப் பொருட்கள் இல்லாததே அதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இதை சீர்படுத்த தமிழக அரசின் அனைத்துத் துறை அதிகாரிகளும், ஊழியர்களும் களத்தில் இறங்கி உள்ளனர். அவர்களுக்கு உதவ போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருவரை கூட விடாமல் கஜா புயல் உடல் அளவிலும் மனதளவிலும் காயப்படுத்தி விட்டது. 6-வது நாளாக ஆதங்கத்துடன் இருக்கும் 4 மாவட்ட மக்களுக்கும் உதவும் வகையில் சுமார் 3 லட்சம் பேரை தமிழக அரசு களத்தில் இறக்கி நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளது.

46 பேரின் உயிரைப் பறித்த கஜா புயல் சுமார் 2 லட்சம் வீடுகளை சேதப்படுத்தி உள்ளது. சுமார் 2 கோடி மரங்கள் சாய்ந்துள்ளன. தென்னை மரங்கள் மட்டும் 40 லட்சம் அளவுக்கு வேரோடு சரிந்து விட்டன. சுமார் 1 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் அதிக பட்சமாக வாழை, கரும்பு, பயிர் வகைகள் நாசமாகி விட்டன.

1 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் விழுந்துள்ளன. சுமார் 5 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கான மின் கம்பிகள் அறுந்துள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன. சுமார் 1 லட்சம் பேர் வீடுகளில் இருந்து வெளியேறி 625 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 


 

புயல் தாக்கிய கடந்த வெள்ளிக்கிழமை சேத விபரங்கள் முழுமையாக வெளியில் தெரியவில்லை. அரசு எடுத்த முன் எச்சரிக்கையால் உயிரிழப்புகளை தடுத்து விட்டனர் என்று கருதப்பட்டது. ஆனால் மக்களின் வாழ்வாதாரங்களை புயல் நாசமாக்கி விட்டதை அடுத்தடுத்து வரும் நாட்களில்தான் அறிய முடிந்தது.

உணவு, உடை, உறைவிடம், குடிநீர், மண்ணெய், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் கிடைக்காமல் டெல்டா மாவட்ட மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். வாழ்வாதாரத்தையும் இழந்து வயிற்றுப் பசியோடும் இருப்பது என்பது மிக, மிக கொடூரமான சூழ்நிலையாக அங்கு உள்ளது. மொத்தத்தில் டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தைப் புரட்டி போட்ட தானே புயலால் அம்மாவட்ட மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து கதறினார்கள். அந்த இழப்புகளில் இருந்து மீள அம்மாவட்ட மக்களுக்கு பல மாதங்கள் ஆனது. அத்தகைய தானே புயல் பாதிப்பை விட கஜா புயல் 10 மடங்கு அதிகமாக கோரத் தாண்டவம் ஆடி பாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பதாக டெல்டா மாவட்டங்களில் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர். தொழில் அதிபர்கள், விவசாயிகள், மீனவர்கள், கூலித் தொழிலாளிகள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் உடமைகளை இழந்து தவிக்கிறார்கள்.

முதல் 2 நாட்கள் டெல்டா மாவட்டங்களின் பாதிப்பு பற்றி வெளி உலகுக்கு முழுமையாக தெரியாமல் இருந்தது. ஆனால் இப்போதுதான் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் குக்கிராமங்களில் கடும் அழிவு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த இழப்புகளைக் கண்டு சேத விபரங்களை ஆய்வு செய்து கணக்கிட்டு தகவல் சேகரிக்க சென்றுள்ள அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் டெல்டா மாவட்ட மக்களுக்கு முதல் தேவை சுத்தமான உணவும், குடிநீரும்தான். அதை முகாம்கள் அமைத்து அரசு அதிகாரிகள் வழங்கி வருகிறார்கள். தன்னார்வத் தொண்டர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கி வருகிறார்கள்.

6-வது நாளான இன்று டெல்டா மாவட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் ஓரளவு கிடைத்து விட்ட நிலையில் உடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் உள்ளனர். அந்த பொருட்களையும் தன்னார்வ அமைப்புகள் வழங்கத் தொடங்கி உள்ளனர். எனவே இன்னும் சில தினங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் நிம்மதியான நிலைக்கு திரும்ப முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்றாலும் டெல்டா மாவட்டங்களில் மக்கள் மத்தியில் எப்போது இயல்பு நிலை திரும்பும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசுத்துறை அதிகாரிகள் கூறுகையில், “டெல்டா மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்ப ஒரு மாதம் ஆகும்” என்றனர். ஆனால் முழுமையான சகஜ நிலை வர பல மாதங்களாகும் என்று தன்னார்வத் தொண்டு அமைப்புகள் கூறுகின்றன.

 


 

டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தேவை ஓரளவு தீர்த்து வைக்கப்பட்டு விடும் நிலையில் மக்களின் அடுத்த மிகப்பெரிய முக்கியத் தேவையாக மின்சாரம் உள்ளது. டெல்டாவில் சுமார் 1 லட்சம் மின் கம்பங்கள் விழுந்து விட்டதால் மின் இணைப்பை சீராக்குவது மிகப்பெரிய சவாலாக மாறி உள்ளது.

புதிய மின் கம்பங்களை நட்டு, கம்பிகளை இணைத்து, மின் மாற்றி உள்ளிட்ட உபகரணங்கள் பொருத்தி மின் இணைப்பை வழங்கி வருகிறார்கள். மின்சார உபகரணங்கள் அனைத்தும் போதுமான அளவுக்கு கை இருப்பு உள்ள நிலையில் சுமார் 14 ஆயிரம் மின்சார ஊழியர்கள் இந்த நிவாரண பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வயல், காடுகளைக் கடந்து கிராமங்களுக்கு மின் கம்பிகளை இழுத்து சென்று மீண்டும் மின் இணைப்பு கொடுப்பது மின் வாரிய ஊழியர்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது. எனவே டெல்டா மாவட்டங்களில் மின்சார இணைப்பு முழுமையாக கிடைக்க குறைந்த பட்சம் 2 முதல் 3 வாரம் ஆகும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே டெல்டா மாவட்டங்களில் தெருக்கள், முக்கிய சாலைகள் ஓரங்களில் சரிந்து விழுந்த மரங்கள், மின் கம்பங்கள் இன்னமும் 60 சதவீதம் அகற்றப்படாமல் உள்ளன. ஆங்காங்கே குப்பைகள் சேர்ந்து இருப்பது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளன. இதைத் தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் 2214 மருத்துவ முகாம்கள் அமைத்து மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடல் நலம் பாதித்த மக்களுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வினியோகிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஆயிரம் டாக்டர்கள், நர்சுகள் டெல்டா மாவட்டங்களில் முகாமிட்டு சுகாதார பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நிலவேம்பு குடிநீர், பிளிச்சிங் பவுடர்கள் தேவைக்கும் அதிகமாக கை இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போது மழை பெய்து வருவதால் அதற்கு ஏற்ப முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற் கொண்டுள்ளது.

நேற்றும் இன்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக நிவாரணப் பணிகளில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் அரசுத் துறை அதிகாரிகள் மழையையும் பொருட்படுத்தாமல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நிவாரண உதவிகள் செய்வதற்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் அரசு வசம் போதுமான அளவுக்கு உள்ளது. ஆனால் அவற்றை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சென்று சேர்க்க முடியாதபடி சாலைகளில் இடையூறு உள்ளது. இதை கண்டித்து பல இடங்களில் மக்கள் மறியலில் ஈடுபடுகின்றனர்.

அவர்கள் கஜா புயல் பாதிப்பை உணர்ந்து அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று டெல்டா மாவட்டங்களில் முகாமிட்டுள்ள அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நிவாரணப் பணிகளை ஒரு வாரத்துக்குள் முடித்து விட வேண்டும் என்ற இலக்குடன் அமைச்சர்களும், அதிகாரிகளும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மின்சார இணைப்பு முழுமையாக சீரான பிறகே மக்கள் முகங்களில் சற்று நிம்மதியை பார்க்க முடியும் என்று கருதப்படுகிறது. ஆனால் மக்களின் வாழ்வாதாரம் எப்போது மீண்டும் வலுப்பெறும் என்பதுதான் அனைத்துத் தரப்பு மக்களிடமும் கேள்விக்குறியாக எழுந்துள்ளது.

டெல்டா மாவட்ட மக்கள் பயிர் பாசனத்தை இழந்த நிலையில் தென்னை, வாழை போன்றவற்றையே நம்பி இருந்தனர். அந்த தென்னை மரங்களும் விழுந்து விட்டதால் வாழ்வாதாரத்துக்கான உள் கட்டமைப்பை எப்படி, எப்போது மீண்டும் உருவாக்கப் போகிறார்கள் என்ற ஏக்கமும், எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. #Gajastorm #Thanestorm #storm

Tags:    

Similar News