செய்திகள்
சுவர் இடிந்து விழுந்து இறந்த அய்யம்மாள் - மின்சாரம் தாக்கி பலியான டிரைவர் ஆனந்த்.

கடலூர் மாவட்டத்தில் பலத்த மழைக்கு 2 பேர் பலி

Published On 2018-11-16 08:17 GMT   |   Update On 2018-11-16 08:17 GMT
கடலூர் மாவட்டத்தில் நள்ளிரவில் பெய்த பலத்த மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவரும், மின்சாரம் தாக்கி டிரைவரும் பலியாகினர். #GajaCyclone #Gajastorm
கடலூர்:

கஜா புயலின் தாக்கத்தால் கடலூர் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. நேற்று நள்ளிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு முகாம்களில் பொதுமக்கள் ஏராளமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு உணவு, உடை வழங்கப்பட்டது. நேற்று நள்ளிரவு 1 மணிக்கு பலத்த மழை கொட்டியது. இந்த விடிய, விடிய பெய்தது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள மேல்மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அரவது மனைவி அய்யம்மாள்(32) இவர்கள் குடிசை வீட்டில் தூங்கிகொண்டிருந்தனர்.

நள்ளிரவு நேரத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அய்யம்மாள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறிஞ்சிப்பாடி பெருமாத்தூரான் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஆனந்த்(40), டிரைவர். இவர் நேற்று இரவு பலத்த மழை பெய்துக் கொண்டிருந்தபோது வீட்டின் உள்ளே மழை நீர் வந்துவிடுமோ என்ற அச்சத்தில், தனது வீட்டின் அருகே உள்ள வடிகால் வாய்க்காலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவர் வீட்டின் அருகே மின்சார பெட்டி இருந்தது. அதில் வயர் ஒன்று அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது. அதனை கவனிக்காமல் ஆனந்த் சாக்கடையை அடைப்பை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அறுந்து தொங்கிக்கொண்டிருந்த வயர் திடீரென்று ஆனந்த் மீது உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

உடனே இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் ஆனந்த் உடலைக் கைப்பற்றி குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்துபோன ஆனந்த்க்கு சுந்தரி(35) என்ற மனைவியும், சார்யா(11) என்ற மகனும், அனுஷ்கா என்ற மகளும் உள்ளனர்.  #GajaCyclone #Gajastorm


Tags:    

Similar News