செய்திகள்

தாயை பிரிந்த குட்டியானைக்கு காட்டெருமை நண்பன்

Published On 2018-11-13 17:16 GMT   |   Update On 2018-11-13 17:16 GMT
தாயை பிரிந்த குட்டியானைக்கு, காட்டெருமை நண்பனாக கிடைத்துள்ளது. அவற்றை பிரிக்க முயன்ற வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.
குன்னூர்:

குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் வனத்துறைக்கு சொந்தமான வனப்பகுதி மற்றும் தனியாருக்கு சொந்தமான தேயிலை, காபி தோட்டங்கள் இருக்கின்றன. தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் ஊடுபயிராக பலா மரங்கள் நடவு செய்யப்பட்டு உள்ளன.

இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை பலாப்பழ சீசன் காலமாக இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் பலாப்பழங்களை தின்பதற்கு சமவெளி பகுதியில் இருந்து காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாக வருவது வழக்கம். அதன்படி கடந்த சீசனில் சமவெளி பகுதியில் இருந்து வந்த காட்டுயானைகள் கூட்டத்தில் இருந்து 5 வயதுடைய குட்டியானை ஒன்று பிரிந்தது.
இந்த குட்டியானை பர்லியார், கே.என்.ஆர். நகர், மரப்பாலம், காட்டேரி நஞ்சப்ப சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் சுற்றித்திரிந்தது. இதனை குன்னூர் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நஞ்சப்ப சத்திர வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு காட்டெருமையுடன், அந்த குட்டியானை நட்புடன் பழகியது. தற்போது காட்டெருமையும், குட்டியானையும் நண்பர்களாக இணைந்தே சுற்றித்திரிகின்றன. இதற்கிடையில் குன்னூர் வனச்சரகர் பெரியசாமி அறிவுரையின்பேரில் வன ஊழியர்களும், வேட்டைத்தடுப்பு காவலர்களும் குட்டியானையையும், காட்டெருமையையும் பிரிக்க போராடி வருகின்றனர். ஆனால் அது நடந்தபாடில்லை. மாறாக பிரிக்க முயற்சிக்கும்போது 2 வனவிலங்குகளும் ஆக்ரோஷம் அடைந்து விடுகின்றன. நேற்று முன்தினம் மாலை குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பூங்கா அருகே காட்டெருமையும், குட்டியானையும் இணைந்து வந்தபோது வனத்துறையினர் அவற்றை பிரிக்க முயற்சித்தனர். ஆனால் அவை வனத்துறையினருக்கு போக்கு காட்டிவிட்டு வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன. இதனால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.

தொடர்ந்து அவைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

தாயை பிரிந்த குட்டியானையையும், அதை தாய் போல பாதுகாத்து செல்லும் காட்டெருமையையும் காணும்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த 2 வனவிலங்குகளையும் பிரிக்க வனத்துறையினர் போராடி வருவதாக தெரிகிறது. யாருக்கும் ஆபத்து ஏற்படாத பட்சத்தில், அவற்றை பிரிக்காமல் அப்படியே விட்டுவிடுவது நல்லது. காலப்போக்கில் அவை பிரிந்து செல்வது நடக்கக்கூடிய ஒன்று தான்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #tamilnews
Tags:    

Similar News