செய்திகள்

தாம்பரத்தில் தண்டவாளத்தில் விரிசல்- மின்சார ரெயில்கள் தாமதம்

Published On 2018-11-12 07:57 GMT   |   Update On 2018-11-12 07:57 GMT
தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது. #ChennaiTrain
தாம்பரம்:

தாம்பரம்-தாம்பரம் சானட்டோரியம் இடையே உள்ள தண்டவாள பகுதிகளை இன்று காலை 8.20 மணியளவில் ரெயில்வே ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.

அப்போது தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். இதுபற்றி உடனடியாக தாம்பரத்தில் உள்ள ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தில் கடற்கரை நோக்கி மின்சார ரெயில் வந்துகொண்டிருந்தது. உடனடியாக ரெயில் என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடுவழியில் மின்சார ரெயில் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து தாம்பரம் செங்கல்பட்டில் இருந்து ரெயில்வே ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை சரிசெய்தனர். இந்த பணியால் தாம்பரம்-சென்னை கடற்கரை ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. தாம்பரத்தில் இருந்து 3,4-வது நடைமேடையில் உள்ள எக்ஸ்பிரஸ் ரெயில் பாதையில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன.

வழக்கமாக 10 நிமிடத்துக்கு ஒரு மின்சார ரெயில் இயக்கப்படும். தண்டவாள விரிசல் காரணமாக 20 நிமிடத்துக்கு ஒரு மின்சார ரெயில் இயக்கப்பட்டது.

இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மின்சார ரெயில்களில் கூட்டம் அலைமோதியது.

காலை 9.30-க்கு பின்னர் மின்சார ரெயில் சேவை சீரானது. தண்டவாள விரிசல் ஏற்பட்ட பகுதியில் மெதுவாக ரெயில்கள் இயக்கப்பட்டன. #ChennaiTrain
Tags:    

Similar News