செய்திகள்

இலவசங்களை பற்றி காசுக்கு நடிப்பவர்கள்- படம் தயாரிப்பவர்கள் பேச அருகதை இல்லாதவர்கள்: அமைச்சர் கண்டனம்

Published On 2018-11-08 09:07 GMT   |   Update On 2018-11-08 09:07 GMT
இலவசங்கள் வேண்டாம் என மக்கள் தான் தெரிவிக்க வேண்டுமே தவிர காசுக்காக சினிமாவில் நடிப்பவர்கள், படம் தயாரிப்பவர்கள் சொல்வதற்கு அருகதை அற்றவர்கள் என்று அமைச்சர் காமராஜ் விமர்சித்துள்ளார். #ADMK #TNMinister #Kamaraj #Sarkar #Vijay
மன்னார்குடி:

மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியோடு அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை அமைச்சர் ஆர்.காமராஜ் இன்று காலை சந்தித்து நலம் கேட்டறிந்தார்.

இதையடுத்து அமைச்சர் காமராஜ், மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை அமைச்சர் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி, தமிழக சுகாதார துறையும் மற்ற துறைகளும் இணைந்து நோய் பரவுவதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை, அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

தற்போது மன்னார்குடி மருத்துவமனையில், தீவிர காய்ச்சலோடு, அனுமதிக்கப்பட்ட அனைவரும் பூரண குணம்பெற்று திரும்பி வருகின்றனர், மேலும் 14 பேர் சிகிச்சையில் நலம் பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில், அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.


மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நலத்திட்டங்களையும் அவர்களையும் கொச்சைப்படுத்தியும் சர்கார் படத்தில் பேசுவது கண்டனத்துக்குரியது.

இலவசங்களை தவிர்க்க என்ற வீராப்பு வசனம் சினிமாவிற்கு வேண்டுமானால் உகந்ததாக இருக்கலாம். இலவச மடிக்கணினி, இலவச மிதிவண்டி, பஸ் பாஸ், சீருடைகள் என பல்வேறு நலத்திட்டங்களால் தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் கல்வித்தரம் உயர்ந்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை உயர்கல்வியில் 48.6 சதவீதம் உயர் கல்வியில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்திய அளவில் 25.8 சதவீதம் கல்வி வளர்ச்சி உள்ளது.

கிராமப்புறங்களில் ஆடு கோழி போன்ற இலவசங்கள் வழங்கப்படுவதால் கிராம மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு உள்ளது.

இலவசங்கள் வேண்டாம் என மக்கள் தான் தெரிவிக்க வேண்டுமே தவிர காசுக்காக சினிமாவில் நடிப்பவர்கள், படம் தயாரிப்பவர்கள் சொல்வதற்கு அருகதை அற்றவர்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Kamaraj #Sarkar #Vijay
Tags:    

Similar News