செய்திகள்

வடகிழக்கு பருவ மழை தொடங்கியது - 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை

Published On 2018-11-01 05:51 GMT   |   Update On 2018-11-01 08:40 GMT
வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ள நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். #NortheastMonsoon #Rain
சென்னை:

தென்மேற்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21-ந்தேதி முடிவுக்கு வந்தது. அதன் பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவான புயல்கள் காரணமாக காற்றின் போக்கு திசை மாறியதாலும், ஈரப்பதம் குறைந்ததாலும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

நவம்பர் 1-ந்தேதி பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

அதற்கேற்ப கடந்த சில நாட்களாக தென்மேற்கு வங்கக்கடல் முதல் தெற்கு ஆந்திராவின் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதி வரை காற்றழுத்தம் நிலவுகிறது.

இதேபோல் இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. மேலும் தென் தமிழகத்தில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. சென்னையிலும் 3 நாட்களாக மழை நீடிக்கிறது.

இதையடுத்து வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியதாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.



அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். சென்னையில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்யும். ஒருசில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களிலும் பருவ மழை பெய்யும். தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களுக்கும் பரவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக புழலில் 11 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் விட்டு விட்டு பலத்த மழை பெய்வதால் கடந்த 3 நாட்களாக பருவ நிலை மாறி இதமான குளிர் நிலவுகிறது.

இதற்கிடையே இலங்கை அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது தீவிரம் அடைந்து புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாகவும் தீபாவளியன்று பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவ மழையால் அடுத்த 2 நாட்களுக்கு 3-ந்தேதி வரை சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும். உள் மாவட்டங்களில் சில இடங் களில் மழை பெய்யும்.

இலங்கைக்கு கிழக்கே தற்போது குறைந்த காற்றழுத்தம் நிலை கொண்டுள்ளது. அது வடமேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகரும் போது மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது. வரும் 6-ந்தேதி தீபாவளி பண்டிகையன்று புயல் காற்றுடன் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை தமிழகத்தில் பரவலாக மழை நீடிக்கும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.  #NortheastMonsoon  #Rain
Tags:    

Similar News