செய்திகள்

டெல்லியில் மாணவி தற்கொலை- விசாரணை நடத்தி உண்மை காரணத்தை கண்டறிய வேண்டும்- ஈஸ்வரன்

Published On 2018-10-30 10:26 GMT   |   Update On 2018-10-30 10:26 GMT
சத்தியமங்கலம் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உண்மை காரணத்தை கண்டறிய வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
ஈரோடு:

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-

டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பயின்று வந்த ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, அவரது அறையில் இறந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்து ஐஏஎஸ் ஆக வேண்டுமென்ற கனவுடன் டெல்லிக்கு சென்ற மாணவி ஸ்ரீமதி. தன்னம்பிக்கையுள்ள, படிப்பில் ஆர்வமுள்ள, சாதிக்க துடிக்கும் மாணவர்கள் தான் தொலை தூரமென்றாலும் மற்ற மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் கல்வி கற்க விரும்பி செல்கிறார்கள்.

ஆனால் அப்படி மற்ற மாநிலங்களுக்கு பயில செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது. டெல்லியில் பயிலும் தமிழக மாணவர்கள் இறப்பதும் தொடர்கதையாகிவிட்டது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவகல்லூரியில் மருத்துவ மேற்படிப்பை பயின்று வந்த திருப்பூரை சேர்ந்த சரவணன் என்ற மாணவன் 2016-ம் ஆண்டு ஜூலை மாதமும், டெல்லி யூசிஎம்எஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பை படித்து வந்த திருப்பூரை சேர்ந்த சரத்பிரபு என்ற மாணவன் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதமும் மர்மமான முறையில் இறந்து சடலமாக மீட்கப்பட்டதை நாம் அறிவோம்.

டெல்லியில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பும், உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல்தான் நிலவி வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு பயில செல்லும் தமிழக மாணவர்கள் இறப்பதற்கான காரணங்களை கண்டறிந்து களையாமல் இத்தகைய உயரிழப்புகளை தடுக்க முடியாது.

தமிழக அரசு எப்போதும் போல ஸ்ரீமதி இறப்பையும் கடந்து செல்லாமல் உரிய விசாரணையை நடத்தி இறப்பிற்கான காரணத்தை வெளிக்கொணர வேண்டும். மற்ற மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை மத்திய அரசும், தமிழக அரசும் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். #Student #commitsuicide
Tags:    

Similar News