செய்திகள்

கோடியக்கரையில் களைகட்டும் சீசன்: ஒரே நாளில் 10 டன் மீன்- நண்டுகள் சிக்கின

Published On 2018-10-28 17:41 GMT   |   Update On 2018-10-28 17:41 GMT
கோடியக்கரையில் மீன்பிடி சீசன் துவங்கி உள்ளது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இங்கு வந்து தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

வேதாரண்யம்:

கோடியக்கரையில் மீன்பிடி சீசன் அக்டோபர் மாதம் துவங்கி மார்ச் வரை நடைபெறும். நாள்தோறும் 10 டன் முதல் 25 டன் மீன்கள் பிடிக்கப்பட்டு கோடியக்கரையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மேலும் கர்நாடகா, கேரளா, மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கோடியக்கரையில் ஒரே நாளில் 10 டன் மீன்கள், நண்டுகள் சிக்கின. கடந்த ஒரு வார காலமாக கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவர் கிராமங்களில் அதிக அளவில் காலா மீன்கள் கிடைக்கின்றன. நாள் ஒன்றுக்கு 5 முதல் 15 டன் வரை காலா மீன்களை மீனவர்கள் பிடித்து வருகின்றனர்.

மீனவர்களது வலையில் காலா, நண்டு, புள்ளி நண்டு. வாவல், ஷீலா, ஏமீன் டன் கணக்கில் கிடைக்கின்றன. இதனால் மீனவர்கள் மகிழ்சசி அடைந்தனர். வாவல் மீன்கள் ரூ.600க்கும் காலா ரூ.300க்கும், நீலக்கால் நண்டு ரூ.400க்கும், ஏமீன்கள் ரூ.250க்கும், சிறிய வகை இறால்கள் ரூ.100 முதல் 300 வரைக்கும், சிறிய ரக மீன்கள் ரூ.150க்கும் ஏலம் போனது. காலா மீன்கள் சென்றவாரம் கிலோ ரூ.500-க்கு விற்பனையானது. தற்சமயம் அதிகளவில் கிடைப்பதால் சரிபாதியாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

மீன் வியாபாரிகள் அதிகளவில் கிடைக்கும்.காலா மீன்களை கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்கு சிரமப்படுகின்றனர். இதே சீசன் இன்னும் 15 நாட்களுக்கு நீடிக்கும் என்று வியாபாரி சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தற்போது அதிக அளவில் காலா மீன் கிடைப்பதற்கு காலா மீன்கள் குஞ்சு பொறிப்பதற்காக ஆழ்கடல் பகுதியிலிருந்து அதிகளவில் வேதாரண்யம் சேற்று கடல் பகுதிக்கு வருவதே காரணம் ஆகும். பிடிபடும் அனைத்து மீன்களும் சினையுடனே காணப்படுகிறது என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News