செய்திகள்

அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி மீண்டும் வெற்றி பெற்றால் அரசியலை விட்டே விலகத்தயார்- அமைச்சர் சவால்

Published On 2018-10-27 04:48 GMT   |   Update On 2018-10-27 04:48 GMT
அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி மீண்டும் வெற்றி பெற்றால் அரசியலை விட்டே விலகத்தயார் என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சவால் விடுத்துள்ளார். #ADMK #MRVijayabaskar #SenthilBalaji
கரூர்:

கரூர் க.பரமத்தியில் அ.தி.மு.க. ஆண்டுவிழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பங்கேற்று பேசியதாவது:-

1½கோடி பேரை உறுப்பினர்களாக கொண்ட அ.தி.மு.க. பல சோதனைகளை தாண்டி வந்துள்ளது. இந்த ஆட்சி எப்போது எத்தனை நாள் நீடிக்கும் என ஏங்கியவர்கள் நிலைமை இன்று தலைகீழாக மாறிவிட்டது. அரவக்குறிச்சி தொகுதியில் கொடுத்த 85 வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து ஒரு உண்ணாவிரத போராட்டத்தை செந்தில்பாலாஜி நடத்தியுள்ளார்.

கடந்த 4½ ஆண்டுகள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தொகுதிக்கு என்ன செய்தார்? மாறாக இதற்கு முந்தைய தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை தோற்கடிக்க செய்தது யார்?. கட்சியை அழிக்க நினைத்தவர்களுக்கு ஜெயலலிதா ஆன்மா தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.



அவர் பொறுப்பில் இருக்கும் போது அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யாமல் தற்போது அரசியல் செய்வதற்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார். கடந்த 1991-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் 249 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்காக வெளியிடப்பட்ட புத்தக வடிவிலான ஓட்டு சீட்டில் இரட்டை இலையினை தேடிப்பிடித்து மக்கள் ஓட்டு போட்டதால் அ.தி.மு.க. வேட்பாளர் மரியம் உல் ஆசியா வென்றார்.

அப்படிப்பட்ட இந்த தொகுதியில் மீண்டும் செந்தில்பாலாஜி நின்று வெற்றிபெற்றால் நான் அரசியலை விட்டே விலகத் தயார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News