செய்திகள்

ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு

Published On 2018-10-24 10:09 GMT   |   Update On 2018-10-24 10:09 GMT
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission
சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 24 -ஆம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையைத் தொடங்கினார். முதல்கட்டமாக விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், அவரது வீட்டில் பணிபுரிந்தவர்கள் என இதுவரை 30 -க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். சாட்சியம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை முடிவடையாத காரணத்தால் கடந்த டிசம்பர் 24 -ஆம் தேதியில் இருந்து 6 மாத காலத்துக்கு அதாவது 2018 -ஆம் ஆண்டு ஜூன் 24 -ஆம் வரை கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பின்னர் மேலும் 4 மாதம் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.



ஆனால், இந்த காலத்திற்குள் விசாரணை நிறைவடையவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பாக மேலும் பலரை விசாரிக்க வேண்டி உள்ளதால் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் கேட்டுக்கொண்டது. அதனை ஏற்ற அரசு, விசாரணை ஆணையத்தின் காலத்தை மேலும் 4 மாதத்திற்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 4 மாதத்திற்குள் ஆணையம் தனது விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மூன்றாவது முறையாக கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission
Tags:    

Similar News