செய்திகள்

சென்னையில் இருந்து சென்ற ஆம்னி பஸ்சில் தீப்பிடித்தது- 4 பேர் உடல் கருகி பலி

Published On 2018-10-19 14:13 GMT   |   Update On 2018-10-19 14:40 GMT
உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதிய விபத்தில் தீ பிடித்தது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

விழுப்புரம்:

சென்னையில் இருந்து நேற்று இரவு 11.30 மணியளவில் மதுரை நோக்கி புதுவை பதிவு எண் கொண்ட என்.எல்.எல். என்ற ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் 26 பயணிகள் இருந்தனர். மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த டிரைவர் அலெக் சாண்டர் (வயது 59) பஸ்சை ஓட்டி சென்றார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அஜீஸ் நகர் என்ற இடத்தில் நள்ளிரவு 1.30 மணி அளவில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அரியலூரில் இருந்து ஆந்திரா மாநிலம் நெல்லூரை நோக்கி சிமெண்ட் ஏற்றிய டேங்கர் லாரி வளைவில் திரும்பியது.

கண்இமைக்கும் நேரத்தில் வேகமாக சென்ற பஸ் டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் டீசல் டேங்க் டமார் என்று பயங்கர சத்ததுடன் வெடித்தது.

இதனால் பஸ்சும், லாரியும் திடீரென்று தீ பிடிக்க தொடங்கியது. தூங்கி கொண்டிருந்த பயணிகள் அனைவரும் திடுக்கிட்டு எழுந்தனர். பஸ் தீப்பிடித்து எரிவதை பார்த்து கூச்சல் போட்டனர்.


பயணிகள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். பஸ் முழுவதும் ஒரே புகைமண்டலமாக காட்சியளித்தது. உள்ளே இருந்தவர்கள் கூக்குரல் போட்டு அலறினர். பின்னர் சிலர் பஸ்சின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து அதன் வழியாக கீழே குதித்தனர்.

இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 3 பேர் மற்றும் டேங்கர் லாரி டிரைவர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-

1) ஆம்னி பஸ் டிரைவர் அலெக்சாண்டர் (53), அலங்காநல்லூர், மதுரை.

2) சக்திவேல் (58), பஸ் டிரைவரின் உதவியாளர், பராசக்தி நகர், மதுரை.

3) மோனிஷா (23)விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை.

4) லாரி டிரைவர் முருகன் (53), நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி.

இந்த விபத்தில் காயம் அடைந்த 10 பேரையும் போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர் பேட்டை அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர்.

காயம் அடைந்தவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1) செல்வநாயகி (60), செங்கல்பட்டு.

2) தமிழ்ச்செல்வன் (30), புதுக்கோட்டை.

3) கேசவன் (30), மதுரை.

4) தியாகு (28), மதுரை.

5) வைதேகி (56), மதுரை உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மங்கலம்பேட்டையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 1½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் 13 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News