செய்திகள்

பஸ் பாஸ் வழங்கக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

Published On 2018-10-13 17:31 GMT   |   Update On 2018-10-13 17:31 GMT
முறையான பஸ் வசதி மற்றும் பஸ் பாஸ் வழங்கக்கோரி கல்லூரி மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பெரும்பாலும் திருவண்ணாமலையை சுற்றி உள்ள கிராமப்புற பகுதிகளில் இருந்து தான் வருகின்றனர். இவர்களுக்கு போதுமான பஸ் வசதி இல்லாததால் கல்லூரிக்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்படுவதாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் ஏற்கனவே, இயக்கப்பட்டு வந்த ஒரு சில அரசு பஸ்களும் உரிய நேரத்தில் இயக்கப்படுவதில்லை என்றும், கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு பஸ் பாஸ் அட்டையும் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. முறையான பஸ் வசதி மற்றும் பஸ் பாஸ் வழங்கக்கோரியும் நேற்று கல்லூரி மாணவ, மாணவிகள் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருந்து அரசு கல்லூரி வரை கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர்.

பின்னர் அவர்கள் கல்லூரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை டவுன் போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கல்லூரிக்கு சென்றனர். 
Tags:    

Similar News