செய்திகள்

திருப்பூர் தண்ணீர் பந்தலில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு- கலெக்டரிடம் அனைத்து கட்சியினர் மனு

Published On 2018-10-12 17:03 GMT   |   Update On 2018-10-12 17:03 GMT
திருப்பூர் 1-வது வார்டு தண்ணீர்பந்தல் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் அனைத்து கட்சியினர் மனு அளித்துள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் 1-வது வார்டு தண்ணீர்பந்தல் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க, தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, பாரதிய ஜனதா கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தனர்.

திருப்பூர் 1-வது வார்டுக்குட்பட்ட தண்ணீர்பந்தல் காலனியின் பிரதான சாலையான கொச்சி-மீன்கரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் புதிய டாஸ்மாக் கடை ஒன்று திறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சாலை மிகவும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையாகும். மேலும் அருகில் கருப்பராயன், கன்னிமான் மற்றும் ஆதிபராசக்தி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களும் உள்ளன.

மேலும் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இந்த சாலை வழியாக மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். டாஸ்மாக் கடை இந்த பகுதியில் திறக்கப்பட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் நிலை உள்ளது.

இதனால் இந்த பகுதியில் டாஸ்மாக் கடையை திறப்பதற்கான முயற்சியை கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News