செய்திகள்

சித்தோடு அருகே நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2018-10-10 11:51 GMT   |   Update On 2018-10-10 11:51 GMT
சித்தோடு அருகே நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு அருகே உள்ள சித்தோடு அடுத்த மணக்காடு பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள். இவரது மகள் சித்ரா(வயது32).

சித்ராவை சேலம் மாவட்ட, மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரில் திருமணம் செய்து கொடுத்தனர்.

சித்ரா அவ்வபோது சித்தோடு அடுத்த மணக்காடு பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

இதே போன்று நேற்றும் சித்ரா சேலத்தில் இருந்து கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஈரோடுக்கு பஸ்சில் வந்துள்ளார்.

பின்னர் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சித்தோடு செல்லும் பஸ்சில் ஏறி உள்ளார். பஸ் மணக்காடு பஸ் நிறுத்தத்தில் வந்து நின்றது.

பஸ்சில் இருந்து இறங்கிய சித்ரா தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக நடந்து கொண்டிருந்தார்.

அப்போது காமராஜர் தெரு அருகே சென்ற போது சித்ரா பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் பின் தொடர்ந்து வந்தனர். அவர்களில் பின்னால் உட்கார்ந்து வந்தவன் கண் இமைக்கும் நேரத்தில் சித்ரா கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்து மோட்டார்சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

சித்ரா திருடன்...திருடன் என்று கத்தினார். ஆனால் அதற்குள் கொள்ளையர்கள் தாங்கள் வந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து சித்ரா சித்தோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News