செய்திகள்

இடைத்தேர்தல் தேதி தள்ளிவைப்பு- எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி

Published On 2018-10-07 07:25 GMT   |   Update On 2018-10-07 07:25 GMT
தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #TNGovernment #DMK #ADMK #ElectionCommission
சென்னை:

மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஷ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

5 மாநில தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தமிழகத்தில் பருவமழை தீவிரமாக இருக்கும் என்பதால் தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க 2 தொகுதிகளுக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்படவில்லை.

இது தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

இதே போன்ற பருவமழை காலங்களில் ஏற்கனவே பல தேர்தல்கள் நடந்து இருப்பதாகவும், தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருப்பதற்கு உண்மையான காரணம் அது இல்லை என்றும் கூறுகிறார்கள்.



இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கே வெற்றி என்ற நிலைதான் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை இருந்தது.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அது முறியடிக்கப்பட்டது. இதை மனதில் கொண்டே தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் கே.பால கிருஷ்ணன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாததற்கு சொல்லப்பட்ட காரணங்கள் எதுவும் பொருத்தமானதாக இல்லை.

ஏற்கனவே, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தாமல் உள்ளாட்சி அமைப்புகள் முடமாகியுள்ளன. இதுபோன்று ஜனநாயக வழிமுறைகளை கைவிடுகிற போக்கு மக்களுடைய பிரச்சினைகளை ஜனநாயக ரீதியில் எதிர்கொள்ள உதவிடாது.

தமிழக இடைத்தேர்தலுக்கான தேதிகள் அறிவிப்பு வராதது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு தேர்தல்கள் முறையாகவும், நேர்மையாகவும் நடைபெற உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். #TNGovernment #DMK #ADMK #ElectionCommission
Tags:    

Similar News