செய்திகள்

அந்தியூர் அருகே வாகனம் மோதி பள்ளி மாணவன் பலி

Published On 2018-10-06 16:11 GMT   |   Update On 2018-10-06 16:11 GMT
அந்தியூர் அருகே வாகனம் மோதி பள்ளி மாணவன் பலியான சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அந்தியூர்:

அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 16). செம்புளிச்சாம் பாளையம் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். தட கள வீரராகவும் இருந்தார்.

இவர் கடந்த 22-ந் தேதி அதிகாலை வாக்கிங் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தலையில் பலத்த அடிபட்ட அவரை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அந்தியூர் போலீசில் தினேஷ்குமார் மீது மோதி விட்டு சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிரா மூலம் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

போலீசாரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இது குறித்து மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திலும் புகார் செய்யப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறினர்.

இந்த நிலையில் இன்று காலை செம்புளிச்சாம்பாளையம் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் அந்தியூர்-பவானி மெயின் ரோடு செம்புளிச்சாம்பாளையம் பஸ்நிறுத்தம் பகுதியில் கூடினர். அவர்கள் அங்கு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் செய்த பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. #tamilnews
Tags:    

Similar News