செய்திகள்

நாளை ரெட் அலர்ட்: தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

Published On 2018-10-06 03:57 GMT   |   Update On 2018-10-06 03:57 GMT
தமிழகம் மற்றும் புதுவையில் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து நான்கைந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #TNRain #RedAlert
சென்னை:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் 8-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 8-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த நான்கைந்து நாட்களுக்கு மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழக மலைப்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகளில் 7-ம் தேதி அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்து உள்ளது.

இதற்கிடையே தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் ஓமன் கரையை நோக்கி நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.



இதன்காரணமாக அரபிக்கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் கடல் காற்று பலமாக வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் மீனவர்கள் குமரி, அரபிக்கடல் பகுதியில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.  #TNRain #RedAlert

Tags:    

Similar News