செய்திகள்

மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் விடிய விடிய சாரல் மழை

Published On 2018-10-04 04:02 GMT   |   Update On 2018-10-04 04:02 GMT
ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, திருவாடானை, சாயல்குடி, திருத்தங்கல், மண்டபம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் தொடர் மழை காரணமாக நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
மதுரை:

கேரளாவை யொட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

வளிமண்டல சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் முதல் மதுரை நகரில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாலை நேரங்களில் சாரல் மழையும் பெய்து வருவதால் தண்ணீர் சாலைகளில் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது.

நேற்று இரவு முதல் இன்று காலை வரை மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சோழ வந்தானில் 53.10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, திருவாடானை, சாயல்குடி, திருத்தங்கல், மண்டபம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் தொடர் மழை காரணமாக நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ராமநாதபுரம் நகரில் சாலையில் மழை நீர் தேங்கியது. சில இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது. காலையில் பெய்த மழையால் பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் சிரமப்பட்டனர்.

ராமேசுவரத்தில் விடிய விடிய மழை பெய்தது. இதனால் ராமநாதசாமி கோவில் பிரகாரத்தில் மழை நீர் தேங்கியது. மழை காரணமாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது. ராமேசுவரத்தில் நேற்று இரவு மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

பலத்த காற்றுடன் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. காற்று காரணமாக பாம்பன் பாலத்தில் ரெயில் குறைந்த அளவு வேகத்தில் இயக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத் திலும் நல்ல மழை பெய்து வருகிறது. காரைக்குடி, தேவகோட்டை, கல்லல், காளையார்கோவில், மானாமதுரை ஆகிய பகுதிகளில் மழை காரணமாக கண்மாய் ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலையும் மழை தொடர்வதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அய்யனார் கோவில் ஆறு, முள்ளி ஆறு, பேயனாறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக 6-வது மைல் குடிநீர் தேக்க ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபத்தூர், சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருவதால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய், ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Tags:    

Similar News