செய்திகள்

நீலகிரியில் 6 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைவருக்கும் நலவாழ்வு திட்டம்- பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2018-10-01 11:12 GMT   |   Update On 2018-10-01 11:12 GMT
நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டாரத்தில் உள்ள 6 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 44 துணை சுகாதார நிலையங்களில் அனைவருக்கும் நலவாழ்வு திட்டம் தொடங்கப்படவுள்ளதாக மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம், ஜெகதளாவில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து நிர்வாகத்துறையின் சார்பில் புதிய நலவாழ்வு மைய தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். மையத்தை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

ஒரு நாடு வளம் பெற வேண்டுமானால் அந்த நாடு ஆரோக்கியம் நிறைந்த நாடாக இருக்க வேண்டும். உடல் நலத்தை பேணி காப்பது நாம் ஒவ்வொருவரின் கடமையாகும். குறிப்பாக ஆரோக்கியத்தில் உலகளவில் நமது இந்தியா முதலிடம் வகிக்கிறது. ஏழை, எளிய மற்றும் சாமானிய மக்கள் தாங்கள் சேமித்த பணத்தை உணவு, உடை மற்றும் கல்வி ஆகியவற்றிற்கு செலவு செய்வதைவிட எதிர்பாராத வகையில், உடல்நலத்தை பேணிகாப்பதற்காக அதிகளவில் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

சுதந்திரத்திற்கு பிறகு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேல் 6 கோடி கழிவறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளிலேயே 8 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.

இதேபோல் சுகாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில், புகையினால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டினை போக்கும் வகையிலும், 8 கோடி ஏழை, எளிய சாமானிய மக்களுக்கு மத்திய அரசின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் விலையில்லா எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2-ந் தேதி அன்று பிரதமரால் ஆயுஸ்மான் பாரத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை, எளிய மக்கள் ஒவ்வொரு ஆண்டிற்கும் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசால் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் ரூ.2 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இந்தியா முழுவதும் மொத்தம் 1.50 லட்சம் மக்கள் நலவாழ்வு மையங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 10,487 மையங்கள் உள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் அனைவருக்கும் நலவாழ்வு திட்டம், குன்னூர் வட்டாரத்தில் உள்ள 6 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 44 துணை சுகாதார நிலையங்களில் தொடங்கப்படவுள்ளது.

ஒவ்வொரு துணை சுகாதார நிலையத்திற்கும் கூடுதலாக ஒரு கிராம சுகாதார செவிலியர் பணியமர்த்தப்பட்டு 24 மணி நேர சேவைகள் வழங்கப்படும். இதன்படி அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தின் கீழ் துணை சுகாதார நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைங்களை நலவாழ்வு மையங்களாக மாற்றப்படுகிறது.

இந்த நலவாழ்வு மையங்களில் தாய் சேய் நலம், பச்சிளம் குழந்தைகள் நலம், குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் நலம், குடும்ப நலம், தொற்று நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை, தொற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை, கண் மருத்துவம், காது, மூக்கு தொண்டை சிகிச்சை, பல் சிகிச்சை, மன நலம், முதியோர்கள் பராமரிப்பு, சிறு நோய் சிகிச்சை அவசர முதல் உதவி சிகிச்சை ஆகிய சேவைகள் அளிக்கப்படும்.

அனைவருக்கும் இலவசமாக சுகாதார சேவைகள் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே நலவாழ்வு திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து மக்களுக்கும் கட்டணமில்லா மருத்துவ சேவை வழங்குவதே ஆகும். நோய் தடுப்பு, சுகாதார மேம்பாடு, நோய் நீக்கம், மறுவாழ்வு ஆகியவற்றிற்கு ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து மக்களும் அவர்களது தகுதிபாராமல் கட்டணமில்லா மருத்துவ சேவை வழங்குவதே ஆகும். இந்த அரிய திட்டத்தின் முதற்படியாக குன்னூர் வட்டாரத்திலுள்ள ஜெகதளா துணை சுகாதார நிலையம், “நலவாழ்வு மையமாக” தொடங்கப்பட்டுள்ளது.

மக்கள் நலனை கருத்தில கொண்டு, அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு, பயன்பெற வேண்டும்”

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News