செய்திகள்

செங்கல்சூளை அதிபர் கொலை: வீடுகளுக்கு மீண்டும் தீ வைப்பு-பதட்டம்

Published On 2018-09-27 10:03 GMT   |   Update On 2018-09-27 10:03 GMT
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே செங்கல்சூளை அதிபர் கொலை தொடர்பாக அப்பகுதியில் உள்ள ஒரு தரப்பினர் வீடுகளுக்கு தீவைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள மேலம்மணம்பேடு முத்து நகரை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 47), செங்கல்சூளை அதிபர்.

நேற்று காலை அவர் வெளியே செல்வதற்காக வீட்டு முன்பு நின்றார். அப்போது கார், மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் வெங்கட்ராமனை சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆத்திரம் அடைந்த வெங்கட்ராமனின் ஆதரவாளர்கள் அதே பகுதியை சேர்ந்த சிலர் கொலைக்கு காரணம் என்று கூறி அவர்களது வீடுகளை அடித்து நொறுக்கினர். 3 வீடுகளுக்கும் தீ வைத்தனர். மோட்டார் சைக்கிள்களும் சேதப்படுத்தப்பட்டது.

இதையடுத்து அங்கு பதட்டமான நிலை ஏற்பட்டது. ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

நேற்று மாலை திருவள்ளூர் ஆஸ்பத்திரியில் வெங்கட்ராமனின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடல் கொண்டு வரப்பட்ட ஆம்புலன்சு மேல்மணம்பேடு பகுதியில் வந்தபோது அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். பின்னர் வெங்கட்ராமனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையே நேற்று இரவு மீண்டும் மேல்மணம்பேடு பகுதியில் உள்ள மற்றொரு தரப்பினரின் 2 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதேபோல் இன்று காலை மேலும் ஒரு குடிசை வீட்டுக்கு சிலர் தீ வைத்தனர். 2 மோட்டார் சைக்கிளும் நொறுக்கப்பட்டது.

இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டமான நிலை நீடித்து வருகிறது. கூடுதலாக ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அசம்பாவிதத்தை தடுக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வெங்கட்ராமனின் அண்ணனான முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் தங்கராஜ் கடந்த 2016-ம் ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மனோகரன் என்பவரது கொலைக்கு பழிக்குப்பழியாக நடந்ததாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக வெங்கட்ராமனும் தீர்த்து கட்டப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதில் ஒருவர் சிக்கி இருப்பதாக தெரிகிறது. அவரிடம் கொலைக்கான காரணம் என்ன? கூட்டாளிகள் யார்- யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News