வெற்றியை உறுதி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும்- மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை
- தமிழ்நாட்டை கபளீகரம் செய்ய திட்டமிடும் கூட்டத்தை வேறோடு வீழ்த்துவோம்.
- அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றுங்கள். ஒற்றுமை இல்லாமல் எந்த இலக்கையும் அடைய முடியாது.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என தெரிகிறது. இந்த தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.
இதற்காக வாக்குச்சாவடி வாரியாக பாக முகவர்கள் தி.மு.க.வில் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரையும் அந்தந்த நகர ஒன்றிய பேரூர் அளவில் ஒருங்கிணைந்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. சட்டமன்ற தொகுதி வாரியாகவும் பாக முகவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மண்டல அளவில் ஆலோசனை கூட்டங்களை நடத்தி முடித்துள்ளனர். இதன் பிறகு என் வாக்குச் சாவடி-வெற்றி வாக்குச்சாவடி பயிற்சி கூட்டத்தை மாமல்ல புரத்தில் கடந்த அக்டோபர் மாதம் 28-ந் தேதி நடத்தினார்.
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வெற்றியை உறுதி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று கட்டளையிட்டு இருந்தார். இப்போது என் வாக்குச் சாவடி-வெற்றி வாக்குச் சாவடி செயல்பாடு எப்படி உள்ளது என்பது பற்றி ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக மாவட்டக் கழக யெலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அவரது அறிவுரைகளை கேட்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநகர ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற, உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர் கள் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரை ஒரே இடத்தில் அமர வைத்து முதலமைச்சரின் பேச்சை கேட்பதற்காக மாவட்டச் செயலாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
அதன்படி காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் உரையாற்றினார். அவர் பேசும்போது, தமிழ்நாட்டை கபளீகரம் செய்ய திட்டமிடும் கூட்டத்தை வேறோடு வீழ்த்துவோம். ஒன்றிய பி.ஜே.பி. அரசு தமிழ்நாட்டுக்கு செய்து கொண்டிருக்கும் துரோகங்களை நிதி ஒதுக்கீடுகளில் செய்து கொண்டிருக்கும் வஞ்சகங்களை எடுத்துச் சொல்லுங்கள். நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அவரவர் வாக்குச்சாவடியில் வெற்றி பெறுவது இலக்காக இருக்க வேண்டும். ஒவ்வொரு பூத்துக்கும் ஒரு டார்கெட் உருவாக்கி செயல்படுங்கள்.
தேர்தலில் பணியாற்றும் ஒவ்வொருவரும் தி.மு.கழகம் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கை உள்ளத்தில் தாங்கி உழைக்க வேண்டும். நீங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கு நன்றாக தெரியும். ஆனாலும் இன்னும் உங்கள் பணியை வேகப்படுத்துங்கள்.
அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றுங்கள். ஒற்றுமை இல்லாமல் எந்த இலக்கையும் அடைய முடியாது. நம்முடைய வெற்றியை யாரும் தடுக்க முடியாது.
என்னுடைய வாக்குச்சாவடியில் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று ஒவ்வொரு கழக உடன் பிறப்புகளும் உறுதியேற்று களப்பணியாற்றினால், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முன்னிலை பெற்று, 2026-ல் 7-வது முறையாக தி.மு.கழகம் ஆட்சி அமைவது உறுதியாகி விடும்.
இவ்வாறு அவர் பேசினார்.