2025 - ஒரு பார்வை

2025 REWIND: என்னை தெரியுமா, நான் எமனுக்கே டஃப் கொடுத்தவன்

Published On 2025-12-08 14:20 IST   |   Update On 2025-12-08 14:20:00 IST
  • விமான நிலைய ரன்வேயில் இருந்து வானில் விமானம் பறந்தது.
  • திடீரென கீழே இறங்கி அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி தீப்பிடித்தது.

அகமதாபாத்:

அழகான மாலை நேரம். பார்க்கில் வாக்கிங் செல்பவர்கள் தங்களது நண்பர்களுடன் பேசிக் கொண்டும், காதில் இயர்போன் மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்டுக் கொண்டும் சென்று கொண்டிருந்தனர்.

அங்குள்ள பெஞ்சில் 65 வயது பெரியவர் சபேசன் உட்கார்ந்து இருந்தார். அங்குள்ளவர்களை சுற்றிலும் நோக்கினார்.

அப்போது ஒருவர் வந்து அவரிடம், ஐயா என்னை நினைவிருக்கிறதா என கேட்டார்.

சரியாக ஞாபகம் இல்லையேப்பா என சபேசன் கூறினார்.

ஐயா, நான் தங்களிடம் படித்த மாணவன். என பெயர் முருகேஷ் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். படித்து வெளியூர் சென்று விட்டேன். தற்போது தான் இந்த ஊருக்கு வந்துள்ளேன் என்றார்.

ரொம்ப சந்தோஷம்பா, என்னை எப்படி அடையாளம் கண்டு கொண்டாய்? என கேட்டார்.

எங்களுக்கு எளிதில் புரியும் விதமாக ஒரு உதாரணம் சொல்லி தானே சார் நீங்க பாடம் நடத்துவீங்க. அதை எப்படி என்னால மறக்க முடியும் என உற்சாகமாக சொன்னார்.

நல விசாரிப்புகள் முடிந்தபின் ஊர் உலக நடப்புகள் பற்றிய பேச்சு வந்தது.

அப்போது அந்த ஆசிரியர், சரி உனக்கு எமன் கிட்ட இருந்து தன் புருஷனை மீட்ட சாவித்ரி பத்தி சொல்லி இருக்கேனே, அதுமாதிரி கடந்த ஆண்டு ஒரு ஆள் எமன் கிட்ட இருந்து தப்பிச்சு வந்திருக்கான் தெரியுமா உனக்கு என புதிர் போட்டார்.

யாருன்னு எனக்கு சரியா தெரியலையே சார், சொல்லுங்க சார் ஞாபகம் வச்சிக்கிறேன் என்றார்.

ஆசிரியர் கூறிய விஷயம் இதுதான்:

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ட்ரீம்லைனர் ரக விமானம் ஜூன் மாதம் 12-ம் தேதி புறப்பட்டுச் சென்றது.


ரன்வேயில் இருந்து வானில் பறந்த விமானம் திடீரென கீழே இறங்கி, விமான நிலையத்தின் அருகில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதி தீப்பிடித்தது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உள்பட மொத்தம் 270 பேர் உயிரிழந்தனர்.

விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பிரிட்டனைச் சேர்ந்த விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்பவரே அந்த அதிசய மனிதர். விமான விபத்தில் இவரது உறவினர் பலியானதால் சோகத்தில் ஆழ்ந்தார்.

நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. இறைவனுக்கு நன்றி எனக்கூறிய அவர், பிரதமர் மோடி நேரில் வந்து சந்தித்து ஆறுதல் கூறியது ஊக்கம் அளித்தது என நெகிழ்ச்சியுடன் கூறினார்.


இப்படித்தான் அந்த ஆள் எமன் கிட்ட இருந்து தப்பிச்சு வந்தான் என கூறி முடித்த சபேசன், சரி, நான் கிளம்பறேன். வீட்டில் தேடுவாங்க. அடிக்கடி வந்துட்டு போப்பா. வேற யாராவது பார்த்தாலும் இங்க வரச்சொல்லு பேசலாம் என வீட்டுக்கு புறப்பட்டார்.

தனது பள்ளி பருவ ஆசிரியரை சந்தித்த நிறைவுடன் முருகேசும் வீடு திரும்பினார்.

Tags:    

Similar News