த.வெ.க. சின்னத்தை பார்த்து நாடே வியக்கப் போகிறது - செங்கோட்டையன்
- மக்கள் சக்தியாக உருவெடுத்து வரும் விஜய் 2026-ல் தமிழக முதல்வராக அமர்வது உறுதி.
- யார் வேண்டுமானாலும் வாக்கு சேகரிக்க வருவார்கள். அவர்களுக்கு வணக்கத்தை போடுங்கள். வாக்குகளை விஜய்க்கு போடுங்கள்.
நம்பியூர்:
முன்னாள் அமைச்சரும், த.வெ.க நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான கே.ஏ.செங்கோட்டையன், த.வெ.க.,வில் இணைந்த பிறகு கொங்கு மண்டலத்தில் கட்சியின் செல்வாக்கை உயர்த்தும் வகையில் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்.
தினமும் அவர் முன்னிலையில் பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர். விரைவில் முன்னாள் அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றிய பகுதி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வசிக்கும் கலைக் கூத்தாடி மக்களை சந்தித்தார்.
அப்பகுதி மக்கள் மத்தாளம் அடித்து, பட்டாசுகள் வெடித்தும், பூக்கள் தூவி, ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து இன்முகத்துடன் வரவேற்றனர்.
அவர்கள் மத்தியில் செங்கோட்டையன் பேசும்போது, இங்கு இருக்கும் குழந்தைகளைக் கேட்டால் கூட விஜய்க்கு தான் ஓட்டு போடுவோம் என்கிறார்கள். ஆண்டவர்களே ஆள வேண்டுமா. மற்றவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கக் கூடாதா. நல்லா ஆட்சியை நடத்த புதிய முகத்தை தேடிக் கொண்டிருந்தீர்கள் கிடைத்துவிட்டார். எல்லோரும் நினைக்கிறார்கள் கடலில் என்னை தள்ளி விட்டதாக, ஆனால் விஜய் என்ற கப்பலில் ஏறி சென்று கொண்டிருக்கிறேன். நான் என்று ஒருவன் நினைத்தால் ஆண்டவன் தான் என்று காட்டி விடுவான்.
"மக்கள் சக்தியாக உருவெடுத்து வரும் விஜய் 2026-ல் தமிழக முதல்வராக அமர்வது உறுதி. தமிழகத்தில் மாற்று அரசியல் சக்தியை உருவாக்க விஜய் புறப்பட்டிருக்கிறார். மக்களுக்கு புனித ஆட்சியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் அரசியலுக்கு வந்துள்ளார். அந்த வழியில் நானும் இணைந்து பயணிக்கிறேன்.
நீங்கள் அஞ்சத் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் வாக்கு சேகரிக்க வருவார்கள். அவர்களுக்கு வணக்கத்தை போடுங்கள். வாக்குகளை விஜய்க்கு போடுங்கள். விரைவில் சின்னம் கிடைக்கப் போகிறது. அந்த சின்னத்தை பார்த்து நாடே வியக்கப் போகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.