செய்திகள்

காவலர் தேர்வு வயதை குறைக்க கவர்னருக்கு அதிகாரம் இருந்தும் மறுக்கிறார் - நாராயணசாமி

Published On 2018-09-25 09:38 GMT   |   Update On 2018-09-25 09:38 GMT
காவலர் தேர்வு வயதை தளர்த்த கவர்னருக்கு அதிகாரம் இருந்தும் மறுத்து வருவதாக புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார். #KiranBedi
புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை காவல்துறை தேர்வில் வயது வரம்பை 24 ஆக உயர்த்த 3 தடவை கவர்னர் கிரண்பேடிக்கு கோப்புகள் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் கோப்பினை திருப்பி அனுப்பினார். மத்திய உள்துறை அமைச்சகம் வயது வரம்பில் தளர்வு கூடாது என பரிந்துரைத்திருப்பதாக கூறுகின்றனர் பரிந்துரை என்பது சட்டமாகாது.

அந்தந்த மாநிலத்துக்கு ஏற்ப வயது வரம்பு தளர்த்தப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரை இந்தியா முழுமைக்குமானது என்றால் அண்டை மாநிலமான தமிழகத்தில் வயது வரம்பு தளர்வு ஏன் அளிக்கப்படுகிறது.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை, வயது வரம்பு 24 ஆக இருப்பது ஏன்? மத்திய அரசே இதனை கடைப்பிடிக்கவில்லை. காவலர் பணியிடங்களை குரூப் ‘சி’ பிரிவில் தான் வருகிறது. வயது வரம்பை தளர்த்துவதற்கு கவர்னருக்கு அதிகாரம் இருக்கிறது. பணி நியமன விதிகளில் வயதை தளர்த்திக் கொள்ளலாம் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 5 நிமிடத்தில் முடிக்க வேண்டிய வேலைக்கு மத்திய அரசுவரை கவர்னர் கிரண்பேடி செல்ல வைத்து விட்டார்.

புதுவை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்வது, தேர்வு செய்யப்பட்ட அரசின் கடமை. இதற்காகத் தான் மத்திய உள்துறை வரை போராடி வருகிறோம்.

எல்லாவற்றிலும் தனக்குத் தான் அதிகாரம் என அடிக்கடி கூறி வரும் கவர்னர் இந்த வி‌ஷயத்தில் தனக்கு அதிகாரம் இல்லை என கூறுவதை மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார். #PuducherryCM #Narayanasamy #KiranBedi
Tags:    

Similar News